சிறுவன் கடத்தல் வழக்கு.. ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்! கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு
சிறுவன் கடத்தல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தன் மீதான கைது நடவடிக்கைக்கு எதிராக ஜெயராம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரன் கூலிப்படை மூலம் கடத்தப்பட்டார். இந்த சம்பவத்தில் கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் உள்ளிட்டோருக் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சிறுவனை கடத்த உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கூடுதல் டிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதையடுத்து தன்னை கைது செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நாளை பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் கைது
காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்தார். சீருடையில் நேரில் ஆஜரான ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராம், நீதிபதி உத்தரவின் பேரில் உயர் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டார்.