Election 2024: பாஜக - தமாகா கூட்டணி உறுதியானது? - மனம் திறந்த ஜி.கே.வாசன்!
BJP and TMC Alliance: யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் தெரிவிப்பேன் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தங்களுடைய கூட்டணிக் கட்சிகளாக காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட், விசிக, கொங்கு மக்கள் தேசிய கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக நடத்தி வருகிறது.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வந்தாலும் கூட கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்க காத்திருக்கிறது. தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற சூழலில் யார் யாருடன் கூட்டணியில் அமைப்பார்கள், புதிய அணி உருவாகுமா? போன்ற பேச்சுக்கள் களத்தில் எழுத்தொடங்கி விட்டன. வழக்கம் போல் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
பாமக, பாஜக கூட்டணியா? அல்லது அதிமுக கூட்டணியா? என்பதை இன்னும் இறுதி செய்யாமல் உள்ளது. அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடன் தான் தேமுதிக கூட்டணி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் தேர்தல் பணிகளை தொடங்கி அவ்வப்போது ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறது. இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. திமுக கூட்டணியில் இணைந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க அந்த கட்சி தயாராகி வருகிறது.
இதனிடையே, டிடிவி தினகரனின் அமமுக, ஒபிஎஸ் அணியினர் பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தையைத் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொங்கு மண்டலம், டெல்டா பகுதி வட மற்றும் தென் மாவட்டங்கள் என அனைத்து மண்டலங்களிலும் போட்டியிட அமமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், பாஜக - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடையே கூட்டணி உறுதியானதாக சொல்லப்படுகிறது. அதிமுகவை பாஜக கூட்டணியில் இணைக்க ஜி.கே.வாசன் மேற்கொண்ட முயற்சிகள் கைகூடாத நிலையில் பாஜக கூட்டணியில் த.மா.கா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்த த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் தெரிவிப்பேன்." என்றார்.
முன்னதாக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனை பாஜக களமிறக்கி இருந்தது. தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியையும் சந்தித்து ஜி.கே.வாசன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இபிஎஸ் கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில் பாஜக கூட்டணியில் த.மா.கா இணைந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
