’திருப்பரங்குன்றத்தில் அசைவம் சாப்புடீங்களா? இல்லையா?’ நவாஸ்கனிக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி
“நான் பிரியாணி சாப்பிட்டதாக அண்ணாமலை கூறுகிறார். அதை நிரூபித்தால் நான் பதவி விலகத் தயார். ஆனால் அவரால் நிரூபிக்க முடியவில்லை என்றால் பதவி விலகுவாரா?, ஐபிஎஸ் படித்துவிட்டு அண்ணாமலை பொய்யை பேசி வருகிறார். எம்.பி. மலை மீது சென்றாரா என்பதை அவரால் நிரூபிக்க முடியுமா?” என்று நவாஸ்கனி கேள்வி

திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் அசைவ உணவு சாப்பிட்ட விவகாரத்தில், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் நவாஸ்கனி ஆய்வு
திருப்பரங்குன்றம் மலை பகுதியில் உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி உள்ளிட்ட பலிகளை தரக்கூடாது என இந்து இயக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக திருப்பரங்குன்றம் வந்த ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக அவரது ‘எக்ஸ்’ தள பதிவில், மதுரை சிக்கந்தர் மலை தர்கா விவகாரம் தொடர்பாக இன்று நேரில் சென்று கள ஆய்வு செய்தோம். மதுரை மாநகர காவல் ஆணையரை சந்தித்து பிரச்சனையின்றி சுமுகமாக கடந்த காலங்களில் எப்படி இருந்ததோ அதேபோல நல்லிணக்கத்துடன் அனைத்து மக்களும் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் பேசியிருக்கிறோம். நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அங்கு தர்காவும், காசி விஸ்வநாதர் ஆலயமும் உள்ளது. தர்காவிற்கு அனைத்து மதத்தினரும் சென்று வருகிறார்கள். எனவே தேவையற்ற அசோகரிகத்தை அங்கு வரும் மக்களுக்கு ஏற்படுத்தாமல் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வலியுறுத்தி உள்ளோம். இது தொடர்பாக காவல்துறை ஆணையரிடம் பேசிய போது உணவு கொண்டு செல்வதற்கு தடை இல்லை ஆடு கோழி எடுத்து செல்வதற்கு இருக்கக்கூடிய தடை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்று விளக்கினார். சமைத்த அசைவ உணவை எடுத்துச் செல்ல தடை இல்லை என காவல் ஆணையர் கூறியதையடுத்து சமைத்த அசைவ உணவை எடுத்துச் சென்று மக்கள் உண்டனர். விரைவில் அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு கடந்த காலங்களில் இருந்தது போன்று மக்கள் சிரமம் இன்றி தர்காவிற்கு சென்று வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்து இருந்தார்.
நவாஸ்கனி பேட்டி
இந்த நிலையில் ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி உள்ளிட்டோர் அசைவ உணவு உண்ணும் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகின. இதற்கு பதில் அளித்த அவர்,
“நான் பிரியாணி சாப்பிட்டதாக அண்ணாமலை கூறுகிறார். அதை நிரூபித்தால் நான் பதவி விலகத் தயார். ஆனால் அவரால் நிரூபிக்க முடியவில்லை என்றால் பதவி விலகுவாரா?, ஐபிஎஸ் படித்துவிட்டு அண்ணாமலை பொய்யை பேசி வருகிறார். எம்.பி. மலை மீது சென்றாரா என்பதை அவரால் நிரூபிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அண்ணாமலை ட்வீட்!
இது தொடர்பாக அண்ணாமலை பதிவிட்டுள்ள ‘எக்ஸ்’ வலைத்தள பதிவில், இரண்டு நாட்களுக்கு முன்பாக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலைக்கு, தனது ஆதரவாளர்களுடன் சென்ற, ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.நவாஸ் கனி, ஹிந்து மக்கள் புனிதமாகக் கருதும் திருப்பரங்குன்றம் மலையில் அமர்ந்து, அவருடன் வந்தவர்கள் அசைவ உணவு உண்ணும் புகைப்படத்தை, அவரது சமூக வலைத்தளப் பக்கத்திலேயே பகிர்ந்திருந்தார். பொதுமக்கள் மற்றும் தமிழக பாஜக சகோதர சகோதரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தவுடன், தற்போது அசைவ உணவு உண்டதை நிரூபித்தால், தனது பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்கிறார்.
அப்படிக் கூறும் காணொளியிலேயே இறுதியாக, தனது ஆதரவாளர்கள், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலையில், அசைவ உணவு உண்டதையும் ஒப்புக்கொள்கிறார்.
நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் கட்டுப்படுவேன் என்ற உறுதிமொழியை ஏற்று, பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற திரு.நவாஸ் கனி, அதனை முழுமையாக மீறியிருக்கிறார். மேலும், திருக்கோவில் மலையில் அசைவ உணவு உட்கொண்டதை, அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதன் ஒரே நோக்கம், ஹிந்து சமய மக்களைப் புண்படுத்துவது மட்டுமே.
தான் கூறியதைப் போல, கோவில் மலையில் அசைவ உணவு உண்டதை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று கூறியிருக்கும் நவாஸ் கனி, அவரது வாயாலேயே உண்மையை ஒப்புக்கொண்டதால், உடனடியாக அவர் பதவி விலகுவதோடு, தமிழ் மக்களின் மனம் புண்படும்படி, முருகப்பெருமான் திருக்கோவிலை அசுத்தப்படுத்தியதற்கு, பொதுமக்களிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
