தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  The Union Government Has Not Paid Even A Single Rupee For The Southern District Flood Victims Says Tn Cm Stalin

Cm Stalin: ‘தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ஒன்றிய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை’ - முதலமைச்சர் ஸ்டாலின்!

Marimuthu M HT Tamil
Feb 25, 2024 12:49 PM IST

தூத்துக்குடி - திருநெல்வேலியில் முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி - திருநெல்வேலியில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த   முதலமைச்சர்
தூத்துக்குடி - திருநெல்வேலியில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த ஆலை,முதற்கட்டமாக 4000 கோடி ரூபாய் முதலீட்டில் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த மின்வாகன உற்பத்தி ஆலையாக அமைக்கப்படவுள்ளது. இத்திட்டம், தென் தமிழ்நாட்டில் வாகன உற்பத்திக்கான முதலாவது பெரிய முதலீடு என்பதும், சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட 50 நாட்களுக்குள் இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இத்திட்டன் மூலம்,"இந்தியாவின் ஆட்டோ ஹப்" மற்றும் "இந்தியாவின் EV தலைநகரம்" ஆக விளங்கும் தமிழ்நாட்டின் நிலையை மேலும் வலுப்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 15ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பின்பேசிய அவர், ‘’ ‘’திமுக ஆட்சிக்கு வந்தபின் பல்லாயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தில் கர்ஜனை மொழியாக செயல்பட்டு, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கிறார், கனிமொழி. 

தங்கை கனிமொழி அவர்களை போலவே, தூத்துக்குடி மாவட்டத்தின் பெண் சிங்கமாக விளங்கும் கீதா ஜீவன் அவர்களும்,அமைச்சராகவும், செயல் வீரராகவும் இருக்கக்கூடிய அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களும் மக்களோடு மக்களாக இருந்து மக்களைக் காப்பாற்றினார்கள். அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட பல அமைச்சர்களையும் இங்கே அனுப்பி வைத்தேன். நானும் இங்கே உடனடியாக வந்தது மட்டுமல்ல, இந்த மீட்பு பணிகள் முடியும்வரை அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும், தங்கை கனிமொழி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து தொலைபேசியில் தேவையான அனைத்து நிவாரணப் பணிகளை உத்தரவிட்டுக் கொண்டு அந்தப் பணிகளை கண்காணித்துக் கொண்டிருந்தேன்.

நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு அவர்களும் இங்கேயே இருந்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களும் இரண்டு வாரங்கள் தங்கி, உடைந்து போயிருந்த பாலத்தை எல்லாம் சரி செய்துவிட்டுதான் திரும்பினார். அமைச்சர் உதயநிதி அவர்களும் ஒருவார காலம் இங்கேயே பணியாற்றினார். 

இப்படி உடனே மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளால்தான் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அடிப்படை வசதிகள் விரைவாக சரி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கின்ற அணைக்கட்டுகள், குளங்கள் மற்றும் வாய்கால்களில் 288 இடங்களில் ஏற்பட்ட உடைப்புகள் 66 கோடியே 45 இலட்ச ரூபாய் மதிப்பில் தற்காலிக சீரமைப்பு பணிகள் மூலம் போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரிசெய்யப்பட்டது.

மேலும், இந்த உடைப்புகள் நிரந்தரமாக சரிசெய்ய 145 கோடியே 58 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதேபோல, திருநெல்வேலி மாவட்டத்திலும், 802 இடங்களில் ஏற்பட்ட உடைப்புகள் 27 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பில் போர்க்கால அடிப்படையில் முதல் கட்டமாக உடனடியாக சரி செய்யப்பட்டது.

நிரந்தரமாக சரிசெய்ய 15 கோடியே 93 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதையெல்லாம் எதற்காக நான் சொல்கிறேன் என்றால், நாங்கள் எப்போதும் உங்களோடு இருப்பவர்கள்.

நலத் திட்ட உதவிகளையும், நிவாரண உதவிகளை வழங்குவதை கடமையாக அதை ஏற்றுக்கொண்டு அத்தோடு நின்றுவிடாது, உங்களுடைய வாழ்க்கை மேம்படவேண்டும், உங்கள் குழந்தைகளுக்கு நல்ல சம்பளத்துடன் நல்ல கம்பெனிகளில் வேலை கிடைக்கவேண்டும். அந்த நோக்கத்தோடு, பல பெரிய நிறுவனங்களில் இந்த பகுதிகளில் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். இப்போதுகூட இங்கே இருக்கக்கூடிய சில்லானத்தம் கிராமத்தில் 4000 கோடி ரூபாய் முதலீட்டில் வின்ஃபாஸ்ட் என்ற மிகப் பெரிய கார் உற்பத்தி செய்கின்ற நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டுத்தான் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். இந்த கம்பெனி தூத்துக்குடியில் மொத்தம் 14,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறது.

அதுமட்டுமல்ல, திருநெல்வேலியில் இருக்கின்ற கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் டாட்டா பவர் நிறுவனம் 2800 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைத்திருக்கிறது. இதனால் அந்த பகுதியைச் சார்ந்த 1800 பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, சமீபத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையொப்பமிட்ட சிங்கப்பூர் நாட்டின் செம்கார்ப் என்ற நிறுவனம் 36,000 கோடி ரூபாய் முதலீட்டிலும், மலேசியாவுடன் பெரிய தொழில் நிறுவனமான பெட்ரோநாஸ் என்ற நிறுவனம் 30,000 கோடி ரூபாய் முதலீட்டிலும், தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைக்க இருக்கிறார்கள். இந்தத் தொழிற்சாலைகளுக்கான பணிகள் விரைவில் துவங்கயிருக்கிறது. இந்தத் தொழிற்சாலைகள் அமையும்போது, இந்தப் பகுதியைச் சார்ந்த ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

கொரோனா பெருந்தொற்று வந்தபோது, தி.மு.க. ஆட்சியில் இல்லை. ஆனால், 'ஒன்றிணைவோம் வா' என்று வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லா பொருட்களையும் வாங்கித் தந்தோம்.

பல ஊர்களில் உணவுக் கூடங்கள் வைத்து, உணவு வழங்கினோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோதும், கொரோனா அலை இருந்தது. அப்போது குடும்ப அட்டைதாரர்கள் எல்லோருக்கும் 4 ஆயிரம் ரூபாய் வழங்கினோம். இதுதான் தி.மு.க.- வின் ஆட்சி. கொரோனாவாக இருந்தாலும், வரலாறு காணாத புயல், வெள்ளமாக இருந்தாலும் மக்களுடைய துயரங்கள் தீர்த்து, அவர்களுடைய வாழ்வாதாரத்தை மறுகட்டமைப்பு செய்ய ஒவ்வொரு தரப்பு மக்களுக்கும் தேவையான திட்டங்கள் நிறைவேற்றுவது தான் நம்முடைய திராவிட மாடல் அரசு. சும்மா பாதிக்கப்படும்போது மட்டும் வந்து பார்த்துவிட்டு செல்பவர்கள் இல்லை நாங்கள்! இறுதி வரைக்கும் உங்களுடன் இருந்து துயரங்களை துடைப்பதின் அடையாளம்தான் இந்த நிகழ்ச்சி என்பதை நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.

சில புள்ளிவிவரங்களை மட்டும் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெருவெள்ளத்தால் உயிரிழந்த 58 நபர்களுக்கு, 5 இலட்சம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டிருக்கிறது.

வெள்ளத்தால் உயிரிழந்த ஆடு, மாடு, கோழிகளின் உரிமையாளர்களுக்கு, 34 கோடியே 74 இலட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகமாக பாதிப்படைந்தவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் 382 கோடியே 25 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, மிதமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 35 கோடியே 92 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

இரண்டு மாவட்டங்களிலும் பாதிப்படைந்த வீடுகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 9 கோடியே 35 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், வீடுகள் பழுது பார்ப்பது, பயிர்ச்சேத நிவாரணம், சிறு வணிகர்களுக்கு சிறப்பு கடன் திட்டம், தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவித் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன், மீன் பிடி படகுகளுக்கான நிவாரணம், கால்நடைகள் வாங்குவதற்கு கடன் உதவி, உப்பளத் தொழிலாளர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் வீதம் உதவித்தொகை,  பழுதடைந்த வாகனங்களுக்கு காப்பீடு ஆகியவை வழங்கப்படும் என்று நான் அறிவித்தேன்.

இந்த அறிவிப்பின்படி, உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இப்போது நிவாரண உதவித்தொகை மற்றும் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 456 பணிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. முழுமையாக சேதமடைந்த வீடுகள் புதிதாக கட்டுவதற்கு 4 லட்சம் ரூபாயும், பகுதியாக சேதமடைந்த வீடுகளில் பழுது நீக்கம் செய்வதற்கு 2 லட்சம் ரூபாய் வரையிலும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

இதன்மூலம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், 4 ஆயிரத்து 624 குடும்பங்கள் பயனடைவார்கள். கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு, புதிய கால்நடைகள் வாங்குவதற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரைக்கும், தனிநபர் கடன் உதவி வழங்கவும் ஆணையிட்டிருக்கிறோம்.

 தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெருவெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை மறுசீரமைப்பு செய்ய 343 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்துகொண்டு வருகிறது.

இதுவரை உழவர்களுக்கு பயிர்க் கடன், கால்நடைப் பராமரிப்பு கடன், சிறு வணிகர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு வணிகக் கடன், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வணிகக் கடன், முதலமைச்சரின் சிறப்பு சிறுவணிகர் கடன், பயிர்க்காப்பீட்டு திட்டத்தின்கீழ் இழப்பீடு, பயிர் சேதங்களுக்கு நிவாரணம், தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணம், சேதமடைந்த மீன்பிடி விசைப் படகுகள், நாட்டு படகுகள், மீன்பிடி வலைகள், மீன்பிடி இயந்திரம் மற்றும் மீன் பண்ணைகளுக்கு நிவாரணத் தொகை என பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டெழுவதற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

666 கோடியே 36 லட்சம் ரூபாய் இந்த மழை வெள்ளத்தால் குடும்ப அட்டைகள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள் அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அவையும் வழங்கப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருக்கின்ற சிறு தொழில் நிறுவனங்கள் தங்களுடைய வணிகத்தை மீண்டும் புதுப்பிக்கும் பொருட்டு, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலமாக கடன் வழங்கப்படும் என்று நான் ஏற்கனவே அறிவித்தபடி, 6 விழுக்காடு சிறப்பு சலுகை வட்டி விகிதத்தில், இந்த இரண்டு மாவட்டத்திலும், 670 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 18 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது.

இதனால், இந்த மாவட்டங்களைச் சார்ந்த உப்பு உற்பத்தியாளர்கள், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறுதொழில் செய்வோர் பயனடைந்து இருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. அதுதான் முக்கியம். ஒன்றிய அரசு ஒரூ ரூபாய்கூட கொடுக்காதபோதும், இது யார் கொடுத்தது என்றால், இந்த ஸ்டாலின் உங்களுக்காக கொடுத்தது! இந்த அரசு உங்களுக்காக கொடுத்தது.

இந்த அளவுக்கு அளப்பரிய நலத் திட்டங்களை நம்முடைய அரசு வழங்கியிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மக்களுடைய நலன் கருதி, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் சில அறிவிப்புகள் வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

முதலில் தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், விளாத்திகுளம் வட்டம், வேம்பாரில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "வேம்பார் பனைப்பொருட்கள் குறுங்குழுமம்" அமைக்கப்படும்.கோவில்பட்டி பகுதியில 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "கோவில்பட்டி கடலைமிட்டாய் குறுங்குழுமம்" அமைக்கப்படும். இந்தக் குழுமத்துக்கான பொது வசதி மையத்தில் மூலப்பொருட்களை தரம் பிரிக்கின்ற வசதி, தானியங்கி பேக்கிங் கூடங்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான கண்காட்சி கூடம் ஆகியவை அமைக்கப்படும்.

தூத்துக்குடியில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் 50 ஆயிரம் சதுர அடியில் வர்த்தக வசதிகள் மையம் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

இவையெல்லாம் தூத்துக்குடி மாவட்டத்துக்கு என்றால், திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், அம்பாசமுத்திரத்திற்கு புதிய மருத்துவமனை கட்டடம், வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகியவை அமைக்கப்படும்’’ என்றார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்