தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Hbd Mc Rajah: 'ஆசிரியர் முதல் அரசியல்வாதி வரை!’ சமூகநீதி அரசியல் போராட்டத்தில் எம்.சி.ராஜா!

HBD MC Rajah: 'ஆசிரியர் முதல் அரசியல்வாதி வரை!’ சமூகநீதி அரசியல் போராட்டத்தில் எம்.சி.ராஜா!

Kathiravan V HT Tamil
Jun 17, 2024 06:15 AM IST

M.C.Rajah: அம்பேத்கருக்கு முன்பே ஆங்கிலேய அரசிடம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை குறித்த கோரிக்கையை எம்.சி.ராஜா வலியுறுத்தினார். ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக லண்டன் வரை சென்று கோரிக்கைகளை முன் வைத்தார்.

HBD MC Rajah: 'ஆசிரியர் முதல் அரசியல்வாதி வரை!’ சமூகநீதி அரசியல் போராட்டத்தில் எம்.சி.ராஜா!
HBD MC Rajah: 'ஆசிரியர் முதல் அரசியல்வாதி வரை!’ சமூகநீதி அரசியல் போராட்டத்தில் எம்.சி.ராஜா!

ட்ரெண்டிங் செய்திகள்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

மயிலை சின்ன தம்பி பிள்ளை ராஜா என அறியப்படும் எம்.சி. ராஜா, ஜூன் 17, 1883 அன்று சென்னையில் பிறந்தார். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட தாமோதர் பஞ்சமர் பாடசாலையில் முதன்மை ஆசிரியராக பணியை தொடங்கினார். அதே சமயம் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக்காக வாழ்நாள் முழுவதும் செயல்பட்டு கொண்டிருந்தார்.

குழந்தைகள் பாடல்கள்

குழந்தைகளின் பள்ளி பாடப்புத்தங்களை வடிவமைப்பதில் முக்கிய பங்களிப்புகளை எம்சி ராஜா அளித்து உள்ளார். ஆர். ரங்கநாயகி அம்மாள் என்பவர் உடன் இணைந்து Kindergarten Room என்ற பெயரில் மழலையர் பள்ளி பாடநூலை வெளியிட்டுள்ளார். ‘கை வீசம்மா கைவீசு’, ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’, ‘நிலா நிலா ஓடிவா’ உள்ளிட்ட பல மழலையர் பாடல்களை எம்சி.ராஜா இயற்றி உள்ளார். 

நீதிக்கட்சியில் அரசியல் செயல்பாடுகள் 

ராஜாவின் அரசியல் பிரவேசம், அமைப்பு ரீதியான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற அவரது விருப்பத்தால் உந்தப்பட்டது. தமிழகத்தில் பிராமணர் அல்லாதவர்களின் உரிமைகளுக்காக வாதிடுவதில் முக்கிய பங்காற்றிய நீதிக்கட்சியில் அவரது அரசியல் செயல்பாடுகள் தொடங்கின. 

சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு பட்டியல் இனத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட எம்.சி.ராஜா, சென்னை மாகாண சட்ட மன்றத்தின் துணை தலைவராகவும் பணியாற்றினார். சில காலம் தற்காலிக சபாநாயகராகவும் எம்.சி.ராஜா செயல்பட்டார். 

அடித்தட்டு மக்களுக்கான உரிமை குரல்

பஞ்சமர், பறையர் என்று அழைக்கப்பட்ட மக்களை  ஆதிதிராவிடர்கள் என்றுதான் அழைக்க வேண்டும் என்று முதல் முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த எம்.சி.ராஜா,  அன்றைய நாட்களில் ஆலய நுழைவு மேம்பாட்டு மசோதாவை ஆதரித்தார். மேலும் பொது இடங்களில் ஆதி திராவிடர்களை அனுமதிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

அம்பேத்கருக்கு முன்பே

அம்பேத்கருக்கு முன்பே ஆங்கிலேய அரசிடம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை குறித்த கோரிக்கையை எம்.சி.ராஜா வலியுறுத்தினார். ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக லண்டன் வரை சென்று கோரிக்கைகளை முன் வைத்தார். ஒடுக்கப்பட்ட இந்துக்கள் என்ற புத்தகத்தின் வாயிலாக அம்மக்களின் வாழ்வின் அவலத்தை ஆங்கிலேயர்களுக்கு விளக்கினார்.

நீதிக்கட்சியில் இருந்து விலகல்

நீதிக்கட்சியில் இருந்த எம்.சி.ராஜா, பிற்காலத்தில் அக்கட்சியில் இருந்து விலகினார். தமிழகத்தின் முதல் தொழிலாளர் போராட்டமான ’பின்னி மில்’ போராட்டத்தை திருவிக உள்ளிட்டோர் தலைமையேற்று போராடியபோது ஒடுக்கப்பட்ட மக்கள் அதை புறக்கணித்து இருந்தனர். 

இதற்கு எம்.சி ராஜாவும் ஒரு முக்கிய காரணம் என்ற விமர்சனம் எழுந்தது.  ஒடுக்கப்பட்ட மக்கள் சென்னை புறநகர் பகுதியில் குடியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த எம்.சி.ராஜா, நீதிக்கட்சியில் இருந்து விலகினார். 

மறைவு

சென்னை பரங்கிமலையிக் குடியிருந்த எம்.சி.ராஜா ஆகஸ்ட் 23, 1943ஆம் ஆண்டில் காலமானார். அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல, கல்வியாளர் மற்றும் சமூக சேவகர். தாழ்த்தப்பட்ட சமூகங்களின் மேம்பாட்டிற்கான அவரது பங்களிப்புகள் தமிழ்நாடு மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

WhatsApp channel

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.