2ம் ஆண்டில் தவெக! 5 கொள்கைத் தலைவர்கள் சிலையை திறந்த விஜய்!
பனையூரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலையம்மாள், வேலுநாச்சியார் ஆகியோரின் படங்களை திறந்தார்.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு ஓராண்டு முழுமை பெற்று உள்ள நிலையில் பனையூரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலையம்மாள், வேலுநாச்சியார் ஆகியோரின் படங்களை திறந்தார்.
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருந்து வரும் தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி அன்று தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை அறிவித்தார்.
ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து முடித்து விட்டு முழு நேர அரசியல்வாதியாக செயல்பட போவதாக தெரிவித்த அவர், அத்துடன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
தமிழகம் முழுவதும் கட்சி உறுப்பினர் சேர்க்கையை விஜய் தீவிரப்படுத்தினார். இதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி பனையூரில் கட்சி கொடியை அறிமுகம் செய்தார். இரட்டை சிவப்பு நிறங்களின் மத்தியில் மஞ்சள் நிறம் கொண்ட கொடியில், வாகை மலர் இடம்பெற்று உள்ளது. இரண்டு யானைகள் கால்களை தூக்கிய படி துதிக்கைகளை நீட்டியபடி கொடி வடிவமைக்கப்பட்டு இருந்தது.
இதனை அடுத்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி அன்று கட்சி மாநாட்டை விஜய் நடத்தினார். அப்போது பேசிய அவர், “பெரியார் எங்கள் கொள்கை தலைவர். பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் கிடையாது. அரசியல் அண்ணன் தம்பி உறவை அறிமுகம் செய்த அறிஞர் அண்ணா சொன்னது போல் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதுதான் எங்கள் கொள்கை, பெரியாருக்கு பிறகு பச்சைத் தமிழன் பெருந்தலைவன் காமராஜர்தான் எங்கள் வழிகாட்டி, இந்திய அரசியல் சாசனத்தை கொண்டு வந்த அண்ணல் அம்பேத்கர் பெயரை இந்தியாவில் கேட்டாலே ஏற்றத் தாழ்வு ஏற்படுத்தியவர்கள் நடுங்குவார்கள். மண்ணை கட்டியாண்ட பேரசி வேலுநாச்சியார், எங்கள் கொள்கை வழிகாட்டி, இந்த மண்ணுக்காக போராடிய புரட்சியாளர் அவர். அடுத்தாக இந்த மண்ணின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அஞ்சலையம்மாள் ஆகியோர் எங்கள் கொள்கை தலைவர்கள்” என விஜய் பேசி இருந்தார்.
