Caste Census: ’தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு! ஸ்டாலினின் சமூகநீதி வேடம் கலைந்தது!’ விட்டு விளாசும் ராமதாஸ்!
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளாது என்ற ஒரே பொய்யை மீண்டும், மீண்டும் கூறி சமூகநீதிக்கு முட்டுக்கட்டை போடுகிறது தமிழக அரசு. இதன் மூலம் முதல்வரின் போலி சமூகநீதி வேடம் கலைந்திருக்கிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டு, அடுத்தக்கட்டம் பற்றி பேரவையை கூட்டி விவாதிக்கும் தெலுங்கானா, முதல்வரின் சமூகநீதி வேடம் கலைந்தது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றனர்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, சமூகநீதி வழங்கும் விஷயத்தில் தெலுங்கானா மாநில அரசு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் அம்மாநில அரசு, அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று முதல் நான்கு நாட்களுக்கு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கவிருக்கிறது. ஆனால், தமிழக அரசோ, சமூகநீதிக்கான போலி முத்திரையைக் குத்திக் கொண்டு, அதற்காக எதுவும் செய்யாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
சட்டப்பேரவையில் தாக்கலாகும் சாதிவாரி கணக்கெடுப்பு
தெலுங்கானா மாநிலத்தில் சமூகநீதி காக்கும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக கடந்த நவம்பர் 6ஆம் தேதி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது.இந்தக் கணக்கெடுப்பின் போது 56 முதன்மைக் கேள்விகள் உள்ளிட்ட மொத்தம் 75 வினாக்கள் கேட்கப்பட்டு பொதுமக்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்கெடுப்பை மேற்கொண்ட அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அதன் அறிக்கையையும், பரிந்துரைகளையும் அம்மாநில அரசிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்திருக்கிறது. ஐதராபாத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக தெலுங்கானா சட்டப் பேரவையின் நான்கு நாள் சிறப்புக் கூட்டத் தொடரும் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.