பென்சில் பிரச்னையில் விபரீதம்.. அரிவாள் வெட்டு சம்பவம் எதிரொலி.. மாணவர்களின் புத்தகப் பைகளை சோதனையிடும் ஆசிரியர்கள்!
திருநெல்வேலியில் பென்சில் தொடர்பான தகராறில் 8-ம் வகுப்பு மாணவரை சக மாணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில், சம்பந்தப்பட்ட மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், சக மாணவனை அரிவாளால் வெட்டினார். இதை தடுக்க முயன்ற ஆசிரியைக்கு காயம் ஏற்பட்டது. சம்பவத்தில் ஈடுபட்ட மாணவன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். முதல்கட்ட விசாரணையில் பென்சில் தொடர்பான தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அரிவாளால் வெட்டிய மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருக்கிறது. வரும் 29 ஆம் தேதி வரை சீர்திருத்த குழுமத்தில் வைக்க இளஞ்சிறார் நீதி குழுமம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தகுதியான நபர்களைக் கொண்டு மாணவனுக்கு கவுன்சிலிங் வழங்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
மாணவர்களின் புத்தகப் பைகள் சோதனை
8 ஆம் வகுப்பு மாணவன், சக மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவத்தின் எதிரொலியாக தனியார் பள்ளி வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித் துறையின் உத்தரவைத் தொடர்ந்து மாணவர்களின் புத்தகப் பைகளை சோதனையிடும் பணியும் நடைபெற்று வருகிறது. பள்ளிக்கு வரும் ஒவ்வொரு மாணவனின் புத்தகப் பைகளையும் ஆசிரியர்கள் சோதனையிட்ட பிறகே பள்ளிக்குள் அனுமதித்து வருகின்றனர். பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கவுன்சிலிங் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
பென்சில் பிரச்னை
சம்பவம் குறித்து கிழக்கு துணை கமிஷனர் வினோத் சாந்தாராம், பாளையங்கோட்டை தாசில்தார் இசைவாணி பள்ளியில் விசாரணை நடத்தினர். ஒரு பென்சில் தொடர்பாக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னைதான் சம்பவத்திற்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வேறு காரணம் உள்ளதா என சக மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடக்கிறது.
பள்ளியில் சோதனை
சம்பவம் நடந்த தனியார் பள்ளியில் விசாரணை நடத்திய பின்னர் திருநெல்வேலி பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இரு சிறுவர்களும் நண்பர்கள். பென்சில் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் இச்சம்பவம் நடந்தது. காயமடைந்த இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர் புத்தகப்பையில் அரிவாளை கொண்டு வந்துள்ளார். அவரது பெற்றோரிடமும் விசாரணை நடக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்