Tasmac Holiday: டாஸ்மாக் கடைகளுக்கு நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை.. எங்கு தெரியுமா?
சூரசம்ஹாரத்தையொட்டி திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (நவ.18) மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் அழைக்கப்படுவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில். முருகன் கோயில்கள் அனைத்தும் மலை மீது இருக்கும் நிலையில், கடலுக்கு அருகில் உள்ள தலம் என்பதால் இந்த கோயிலுக்கு என்று தனி சிறப்பு உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்குள்ள கடற்கரையில் நீராடி முருகனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
திருச்செந்தூர் கோயிலில் நடக்கும் பல்வேறு முக்கிய விழாக்களில் கந்த சஷ்டி திருவிழாவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி அதிகாலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது.
கந்தசஷ்டி திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கடற்கரையில் நாளை மாலை நடைபெற உள்ளது. சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நாளை (நவ.18) திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளை நாளை மூட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுபான கடத்தல், பதுக்கல், விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்