TASMAC : டாஸ்மாக் வரலாறு: ‘ஆறாய் தொடங்கி கடலாய் பாயும் மதுக்கடை’ அரசின் காமதேனு!
TASMAC : சில்லரை வணிகத்தில் இருந்து வந்த ஊழல், இப்போது தயாரிப்பில் தொடங்கி, விற்பனை வரை நடந்த ஊழலால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

TASMAC : டாஸ்மாக் சோதனையில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக, அமலாக்கத்துறை முறைப்படி அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ரெய்டு குறித்த தகவல்கள் தற்போது வெளியான நிலையில், தமிழக அரசியலில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் என்றால் என்ன? எப்போது தொடங்கப்பட்டது? அதன் வரலாறும், வருவாயும் என்ன? இதோ இங்கு பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் மதுபானக் கொள்கை
தமிழ்நாட்டின் மதுபானக் கொள்கை பல்வேறு காலகட்டங்களில் மாறுபட்டுள்ளது. 1937 ஆம் ஆண்டு முதல் மதுவிலக்கு கொள்கை அமல்படுத்தப்பட்டது, ஆனால் வருவாய் குறைவால், சில காலங்களில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது.
தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம் (Tamil Nadu State Marketing Corporation - TASMAC) என்பது தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை மொத்தமாகவும் சில்லறையாகவும் நிர்வகிக்கும் ஒரு அரசு நிறுவனம் ஆகும். இது 1983 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அரசால் தொடங்கப்பட்டது.
டாஸ்மாக் நிறுவனத்தின் பணி என்ன?
இந்த கழகம் மதுபான விற்பனையை ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அரசுக்கு வருவாய் ஈட்டும் முக்கிய நோக்கத்துடன் செயல்படுகிறது. மேலும், இது மதுவிலக்கு துறையின் கீழ் செயல்படுகிறது. டாஸ்மாக் நிறுவப்பட்டதன் முக்கிய நோக்கம் மாநிலத்தில் மதுபான விற்பனையை மொத்தமாகவும் சில்லறையாகவும் ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதாகும்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொள்கை பல ஆண்டுகளாக அமலில் இருந்தது, ஆனால் அரசின் வருவாய் குறைவால், மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. இதனால் டாஸ்மாக் நிறுவப்பட்டு, மதுபான விற்பனையில் அரசின் முழு கட்டுப்பாடு கொண்ட அமைப்பாக செயல்பட தொடங்கியது.
அரசின் காமதேனு டாஸ்மாக்
டாஸ்மாக் (TASMAC) நிறுவனத்தால் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுதோறும் பெரும் வருவாய் கிடைக்கிறது. இன்னும் சொல்லப் போனால், டாஸ்மாக் வருவாய் தான், அரசையும், அரசின் திட்டங்களையும் காப்பாற்றுகிறது. 2023-24 நிதியாண்டில், டாஸ்மாக் மூலம் ரூ.45,855.67 கோடி வருவாய் கிடைத்தது, இது முந்தைய ஆண்டைவிட 2% அதிகமாகும். இந்த வருவாயில் ரூ.10,774.28 கோடி மதுபான வரி (excise duty) மூலம், மற்றும் ரூ.35,081.39 கோடி விற்பனை வரி (sales tax) மூலம் கிடைத்தது.
கடந்த 20 ஆண்டுகளில் டாஸ்மாக் (TASMAC) வருவாய் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. 2005-06 நிதியாண்டில், டாஸ்மாக் மூலம் ரூ.7,335 கோடி வருவாய் கிடைத்தது, அதேசமயம் 2023-24 நிதியாண்டில் இது ரூ.45,855.67 கோடி வரை உயர்ந்துள்ளது. அப்படியென்றால், அதன் வருவாய் எழுச்சியை நீங்களே கணித்துக் கொள்ளுங்கள்.
பாட்டிலுக்கு ரூ.10 ஊழல்
தமிழக அரசின் காமதேனுவாக பார்க்கப்படும் டாஸ்மாக், முறைகேடுகளுக்கு எப்போதும் பெயர் போனதாக உள்ளது. குறிப்பாக சில்லறை விற்பனையில் பாட்டிலுக்கு ரூ.10 வெளிப்படையாக கொள்ளையடிக்கும் செயல் இன்றும் தொடர்கிறது. கண் முன் தெரிந்தே நடக்கும் இந்த முறைகேடு, போதை என்கிற ஒரே பலவீனத்தால் கடந்து போய்க் கொண்டிருக்கிறது.
சில்லரை வணிகத்தில் இருந்து வந்த ஊழல், இப்போது தயாரிப்பில் தொடங்கி, விற்பனை வரை நடந்த ஊழலால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமலாக்கத்துறையின் நடவடிக்கை, ஆண்டுகளாக புரையோடிப்போன டாஸ்மாக் ஊழலை ஒட்டுமொத்தமாக அழிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

டாபிக்ஸ்