டாப் 10 தமிழ் நியூஸ்: டாஸ்மாக் வழக்கில் இன்று மீண்டும் விசாரணை முதல் கேஸ் சிலிண்டர் விலை குறைவு வரை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  டாப் 10 தமிழ் நியூஸ்: டாஸ்மாக் வழக்கில் இன்று மீண்டும் விசாரணை முதல் கேஸ் சிலிண்டர் விலை குறைவு வரை!

டாப் 10 தமிழ் நியூஸ்: டாஸ்மாக் வழக்கில் இன்று மீண்டும் விசாரணை முதல் கேஸ் சிலிண்டர் விலை குறைவு வரை!

Karthikeyan S HT Tamil
Published Apr 01, 2025 09:50 AM IST

டாப் 10 தமிழ் நியூஸ்: தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் தொகுப்பை இன்றைய காலை பொழுதின் டாப் 10 செய்தித் தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

டாப் 10 தமிழ் நியூஸ்: டாஸ்மாக் வழக்கில் இன்று மீண்டும் விசாரணை முதல் கேஸ் சிலிண்டர் விலை குறைவு வரை!
டாப் 10 தமிழ் நியூஸ்: டாஸ்மாக் வழக்கில் இன்று மீண்டும் விசாரணை முதல் கேஸ் சிலிண்டர் விலை குறைவு வரை!

தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகள் மீது இன்று விசாரணை

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

3 நாட்களுக்கு பிறகு இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை

3 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது.

40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமல்

தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. 40 சுங்கச் சாவடிகளில் 5 முதல் 50 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனர். வானகரம், செங்கல்பட்டு, பரனூர், திண்டிவணம், ஆத்தூர், சூரப்பட்டு உள்ளிட்ட சுங்கச் சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.75 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நடைமுறைக்கு வந்தது இ-பாஸ்

நீலகிரி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நீலகிரி, கொடைக்கானலில் புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது.

மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் ஏப்.6-ம் தேதி ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தங்கம் விலை அதிரடி உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப்.01) சவரனுக்கு ரூ. 480 உயர்ந்துள்ளது. இன்று காலை சவரனுக்கு ரூ. 480 அதிரடியாக உயர்ந்து ரூ. 68,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் விலை ரூ. 8,510. வரலாற்றில் முதல்முறையாக தங்கத்தின் விலை ரூ. 68,000-ஐ கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

கோடை விடுமுறை எதிரொலி

இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வார நாட்களில் 4000 வாகனங்களுக்கும், வாரயிறுதி நாட்களில் 6000 வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும். சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்றுள்ளனரா என அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வாகனங்களை அனுமதிக்கின்றனர்.

சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு அருகே கார் மீது கனரக லாரி மோதியதில் ஒரு வயது குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். சிங்கப்பெருமாள் கோவில் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் மதுரையை சேர்ந்த அய்யனார், கார்த்தி மற்றும் 1 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு

துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு மற்றும் குரூப் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.ஏப்ரல் மாத இறுதி வரை இணையதளம் மூலம் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூன் 15ஆம் தேதி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

வணிக கேஸ் சிலிண்டர் விலை குறைவு

தமிழகத்தில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை இம்மாதம் ரூ.43.50 குறைந்துள்ளது. கடந்த மாதம் ரூ.1,965 ஆக இருந்த வணிக சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்து தற்போது ரூ.1,921.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.818-க்கு விற்பனையாகிறது.