Tasmac Scam: டாஸ்மாக் ஊழல்: அமலாக்கத் துறைக்கு எதிரான வழக்கு இன்று பட்டியலிடப்படவில்லை.. காரணம் என்ன?
டாஸ்மாக் மதுபான மோசடி தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அவ்வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்து, விசாரணையை தள்ளி வைத்தனர்.

அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக, டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர், அவ்வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நேற்றி அறிவித்திருந்தனர். இதையடுத்து டாஸ்மாக் மதுபான "மோசடி" தொடர்பான வழக்குகள் மாற்று நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. அமலாக்கத்துறைக்கு எதிராக டாஸ்மாக் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் இன்று நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய மாற்று பெஞ்ச் முன் பட்டியலிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. ஏனெனில் தலைமை நீதிபதியின் உத்தரவுகளைப் பெற்ற பிறகு மாற்று பெஞ்ச் முன்பு பட்டியலிடப்படும் என்று பதிவாளர் தெரிவித்துள்ளார்.
ED-க்கு எதிரான வழக்கு
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6 முதல் மார்ச் 8 வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகளை எதிர்த்து மாநில அரசும் தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகமும் (TASMAC) கூட்டாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்ற மாநில அரசு வழக்கறிஞர் (எஸ்.ஜி.பி) எட்வின் பிரபாகரின் கோரிக்கையை நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் புதன்கிழமை ஏற்றுக்கொண்டது.
வியாழக்கிழமைக்குள் ரிட் மனுக்கள் பெறப்பட்டால், அவற்றை விசாரிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அன்று மாலையில், பதிவேட்டில் மூன்று ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மாநில அரசும் டாஸ்மாக்கும் இணைந்து தாக்கல் செய்த முதல் ரிட் மனு, மாநில அரசின் அனுமதியின்றி அமலாக்கத்துறை இதுபோன்ற சோதனைகளை நடத்துவது கூட்டாட்சி கொள்கையை மீறுவதாக அறிவிக்கக் கோரியது.
மனுக்களில் இருந்தது என்ன?
இந்த ரிட் மனுவில், மனுதாரர்கள் அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையின் (ECIR) உண்மையான நகல்களை வழங்க ED-க்கு இடைக்கால உத்தரவைக் கோரியிருந்தனர், அதன் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA), 2002 இன் கீழ் அதன் அதிகாரங்களைப் பயன்படுத்தி சோதனைகளை நடத்தியது. மற்ற இரண்டு ரிட் மனுக்கள் TASMAC-யால் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டன, அவற்றில் ஒன்று மார்ச் 6 முதல் 8 வரை நடத்தப்பட்ட சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரியது, மற்றொன்று விசாரணை என்ற போர்வையில் TASMAC ஊழியர்களை துன்புறுத்த வேண்டாம் என்று ED-க்கு உத்தரவிடக் கோரியது.
நீதிபதிகள் விலகல்
இந்த வழக்கை கடந்த மார்ச் 20 அன்று விசாரி்த்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இதுதொடர்பாக அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 25-க்கு தள்ளிவைத்திருந்தனர். அதுவரை அமலாக்கத் துறை எந்தவொரு மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் இடைக்கால தடை விதித்திருந்தனர். இதற்கிடையில், இந்த வழக்கு இதே பெஞ்ச் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் விசாரணையில் இருந்து இருவரும் விலகுவதாக அறிவித்து, விசாரணையை தள்ளி வைத்தனர். இந்த நிலையில் தான், இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. விரைவில் தலைமை நீதிபதியின் ஒப்புதலை பெற்று வேறு அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாபிக்ஸ்