Tasmac: இனிமே டாஸ்மாக் கடைகளில் கம்ப்யூட்டர் பில் - கூகுள் பே கொண்டு வர ஏற்பாடு
மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க கம்ப்யூட்டர் பில்முறையை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் தொடர்ந்து மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனைத் தடுப்பதற்காக அவ்வப்போது டாஸ்மாக் அலுவலர்கள் கடைகளில் திடீரென சோதனை மேற்கொண்டு விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுபானங்கள் கூடுதல் விளைக்கு விற்கப்படுவதைத் தடுக்க நமது அண்டை மாநிலமான கேரளா போல கம்ப்யூட்டர் பில் முறையைக் கொண்டுவர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் மூத்த அலுவலர் கூறுகையில், தமிழ்நாட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன. மதுபானங்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்வது குறித்து ஏராளமான புகார்கள் தொடர்ந்து வருகின்றன. சமீப காலங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் முறைகேடு செயலில் ஈடுபட்ட 1967 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் இந்த சிக்கலைக் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளது. அதனால் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கணினி மயமாக்கப்பட்ட பில்லிங் முறை கொண்டு வர அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வாடிக்கையாளர்கள் மதுபானத்திற்கு உரிய தொகை செலுத்தி கவுண்டரில் பில்லை பெற்றுக் கொள்ளலாம். அந்த பிள்ளை இரண்டாவது கவுண்டரில் கொடுத்து மதுபானம் வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.
முதலில் அனைத்து கடைகளிலும் இந்த கம்ப்யூட்டர் பில்லிங் முறையைக் கொண்டு வருவதா?, அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டு வருவதா என்பது குறித்து அலுவலர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
கேரளாவில் இந்த கம்ப்யூட்டர் பில்லிங் முறை வெற்றிகரமாக நடைபெற்று வருவதால், அலுவலர்கள் அங்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்வதற்குத் தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்க உள்ளனர்.
மதுபான கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் மெஷின்களை பயன்படுத்த அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும் அறிவுறுத்தி இருக்கின்றோம். நகர்ப்புற பகுதிகளில் உள்ள கடைகளில் ஏற்கனவே இந்த எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. கிராமப்புற பகுதிகளுக்கு விநியோகம் செய்யும் முயற்சிகள் தற்போது நடந்து வருகின்றன.
இந்த ஜூன் மாத இறுதிக்குள் கியூ ஆர் குறியீடு, கூகுள் ப்ளே உள்ளிட்ட டிஜிட்டல் சேவை மூலம் தொகை செலுத்தி மதுபானம் பெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது. தற்போது இது குறித்து வங்கிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
கம்ப்யூட்டர் பில் முறை மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவை உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டால் வெளிப்படைத் தன்மை மேம்படும், அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்