தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tamilnadu Graduate Teacher Exam Is Going On Today

130 மையங்களில் இன்று நடக்கிறது பட்டதாரி ஆசிரியர் தேர்வு.. தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை என்ன?

Divya Sekar HT Tamil
Feb 04, 2024 07:53 AM IST

தமிழ்நாடு முழுவதும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு இன்று நடைபெறுகிறது. 130 மையங்களில் 41,485 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

பட்டதாரி ஆசிரியர் தேர்வு
பட்டதாரி ஆசிரியர் தேர்வு

ட்ரெண்டிங் செய்திகள்

மாநிலம் முழுவதும் 130 மையங்களில் நடைபெற உள்ள தேர்வை, 41 ஆயிரத்து 485 பேர் எழுதவுள்ளனர். காலை 10.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 1.30 மணிக்கு நிறைவடையும் என்றும், தேர்வுக்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த தேர்வில் தமிழ் பகுதியில் தேர்ச்சி கட்டாயம் என்ற அறிவிப்பில் இருந்து, மொழி சிறுபான்மை விண்ணப்பதாரர்களுக்கு விலக்களிக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்வினைக் கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறையின் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசுத் தேர்வு நடைபெறுவதால், தேர்வு மையத்திற்குள் அனுமதியின்றி நுழையக் கூடாது. அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட தாள்கள் எவற்றையும் தேர்வு அறைக்குள் வைத்திருக்கக் கூடாது.

கைப்பேசி. கைக்கணினி, மடிக்கணினி, கணக்கிடும் கருவிகள் போன்றவற்றையும் தேர்வறைக்குள் வைத்திருக்கக் கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டும். மேலும், தேர்வறைக்குள் அறைக் கண்காணிப்பாளர் அல்லது பிற தேர்வர்களிடம் முறை தவறி நடந்தால், அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றாமல், குற்றவியல் செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் தேர்வினைத் தொடர்ந்து எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், அவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளைத் தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு எழுத தடை விதிக்கப்படுவதுடன், காவல்துறை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தேர்வு அறைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படும் ஹால் டிக்கெட் இல்லாமல் வரும் தேர்வர்கள், தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும், ஓஎம்ஆர் தாளில் விடைகளைக் குறியீடு செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வில் தமிழ் மொழித்திறன் அறிவதற்கான 50 மதிப்பெண்களை உள்ளடக்கிய 30 கேள்விகள், முதன்மைப் பாடமான தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களில் இருந்து ஒரு பாடத்தில் 150 வினாக்கள் வீதம், 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம் பெறும்.

இந்தத் தேர்வு காலை 10.30 மணிக்கு துவங்கி 1.30 மணிக்கு முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் ஹால் டிக்கெட்டில் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்