Tamil Nadu Government: ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு சிக்கல்..தமிழக அரசு விடுக்கும் எச்சரிக்கை இதுதான்!
Online Gaming: இணையவழி சூதாட்டம் பற்றி விளம்பரப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம் அல்லது பிற வழிகளில் இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது தூண்டும் வகையில் எந்த ஒரு நபரும் மின்னணு தொடர்பு சாதனங்கள் உட்பட எந்தவொரு ஊடகத்திலும் விளம்பரமோ அறிவிப்போ செய்ய கூடாது. தடை செய்யப்பட்ட விளம்பரங்களை ஒளிபரப்பும் நபர்கள், பிரபலங்கள், விளம்பர நிறுவனங்கள், விளம்பர தயாரிப்பாளர்கள், சமூக ஊடகத் தளங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், " தமிழ்நாடு இணையவழி சூதாட்டத் தடை மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் 2022-ன்படி, இணையவழி சூதாட்டம் மற்றும் இணையவழி வாய்ப்பு விளையாட்டு, பந்தயம் போன்றவற்றை விளையாடுவதைத் தடை செய்துள்ளது. அவ்வாறு தடை செய்யப்பட்ட இணையவழி சூதாட்டங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றம்புரிபவர்களுக்கு 3 மாதம் வரை சிறைத்தண்டனையோ அல்லது ரூ.5,000 வரை அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இணையவழி சூதாட்டம் (Online Gambling) அல்லது இணையவழி வாய்ப்பு விளையாட்டுகள் (Game of Chance) பரிவத்தனைகளில் ஈடுபடும் நிதி நிறுவனங்களை, கட்டண நுழைவாயில்களை இச்சட்டம் தடைசெய்கிறது.