Tamil News  /  Tamilnadu  /  Tamilnadu Cm To Inaugrate Four Important Water Projects, Says Minister Kn Nehru

Minister KN Nehru: நான்கு முக்கிய குடிநீர் திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கும் முதலமைச்சர் - அமைச்சர் கே.என். நேரு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 24, 2024 03:13 PM IST

150 MLD நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உட்பட நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் நான்கு மிகப்பெரிய திட்டங்களை முதலமைச்சர் வெளிநாடு பயணம் முடிந்து வந்த பிறகு தொடங்கி வைக்க இருக்கிறார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோக துறை அமைச்சர் கே.என். நேரு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோக துறை அமைச்சர் கே.என். நேரு

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை சேப்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில், அலுவலர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கும் நிகழ்வில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு பங்கேற்றார். இதில் ரூ. 1 கோடி 35 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வாரிய அலுவலர்களுக்காக புதிதாக வாங்கப்பட்ட 13 பொலிரோ வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என். நேரு கூறியதாவது:

இதுவரை 4 கோடியே 20 லட்சம் மக்களுக்கு மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மேலும் 3 கோடி பேருக்கு குடிநீர் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் இன்னும் 10 நாள்களில் தொடங்கப்பட உள்ளது. கோவையில் 158 MLD தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது. மதுரையில் 153 MLD தண்ணீர் ஒரு மாதத்தில் தொடங்க உள்ளது.

திருப்பூரில் 120 MLD குடிநீர் திட்டம் தொடங்க இருக்கிறது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இரண்டாம் கட்ட பணி ரூ. 10 ஆயிரம் கோடி அளவில் நடைபெற்று வருகிறது.

பொறியாளர்களுக்கு விரைவாக சென்று பணியை மேற்கொள்வதற்கு புதிதாக வாகனங்கள் வாங்கி கொடுக்கப்படுகிறது. முதலமைச்சர் வெளிநாடு சென்று வந்த பிறகு நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், மதுரை, திருப்பூர், கோவை குடிநீர் திட்டங்களை மிகப்பெரிய அளவில் தொடங்கி வைக்கிறோம்.

திண்டுக்கல், புதுக்கோட்டை, நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் புதிதாக கூட்டு குடிநீர் திட்டம் அமைக்க முதலமைச்சரிடம் கேட்டுள்ளோம். இது குறித்து அறிவித்து, அதற்கான நிதி வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஒதுக்கி தருவதாக கூறி இருக்கிறார்.

உடனடி தேவையாக இருக்கும் திட்டங்கள் முதலில் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. விரைவில் பணியாளர்கள் எடுப்பதற்காக அறிவிப்பு வெளியாகும்.

சென்னையில் இப்போது தான் மழை பெய்து வெள்ளம் வடிந்துள்ளது. இதனால் தண்ணீர் பஞ்சம் வராது. கோடை காலத்தில் சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை தேவையான தண்ணீர் இருப்பு உள்ளது.

காவிரி படுகையிலும் வடகிழக்கு பருவ மழையால் நிலத்தடி நீர் உள்ளது அதை வைத்து வரும் கோடை காலத்தை சமாளித்து கொள்ளலாம்.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கபட்ட அனைத்து சாலைகளிலும் புதுப்பிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ரூ. 810 கோடி மதிப்பில் டெண்டர் விடப்படுகிறது. சென்னையில் பாதாள சாக்கடை பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்