மாநில உரிமைகளை மீட்டெடுக்க உயர்நிலைக் குழு.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!
‘நீட்’ தேர்வு ஒரு சாராருக்கு மட்டுமே பயனுள்ளதாகவும், பயிற்சி மையங்களை ஊக்குவிக்கும் வண்ணமும், கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (ஏப்ரல் 15) விதி எண் 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசியதாவது: மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்க உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை வரும் ஜனவரி 2026-ல் சமர்ப்பிக்கப்படும். இறுதி அறிக்கை இரண்டு ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்படும். இக்குழு மாநில உரிமைகளை மீட்டெடுப்பதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும்.
இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான அசோக் வர்தன், தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் மேனாள் துணைத்தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் இக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
சமூகநீதி, பொருளாதார ஏற்றத்தாழ்வின்மை, ஒடுக்கப்பட்டோருக்கான வாய்ப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, மாநில அரசின் கல்விக் கொள்கையின் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் தமிழ்நாட்டு மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்யும் வண்ணம் இருந்து வந்த நமது கல்விக் கொள்கையினை நீர்த்துப் போகச் செய்து முழுமையாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் ‘நீட்’ எனும் ஒற்றைத் தேர்வின் வாயிலாக மட்டுமே மருத்துவக் கல்வி இடங்களை நிரப்பும் முறைக்கு மாற்றப்பட்டுவிட்டது.
இந்த ‘நீட்’ தேர்வு ஒரு சாராருக்கு மட்டுமே பயனுள்ளதாகவும், பயிற்சி மையங்களை ஊக்குவிக்கும் வண்ணமும், கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும்விதமாகவும் உள்ளது.
இதேபோல், மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி ஒத்திசைவுப் பட்டியலுக்கு ஒன்றிய அரசால் மாற்றம் செய்யப்பட்டதால், தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் மூலம் மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்க ஒன்றிய அரசால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தி மொழி மறைமுகமாக தமிழ்நாட்டு மாணவர்களின் மீது திணிக்கப்படுகிறது. தமிழ்நாடு தேசிய கல்விக் கொள்கையை நிராகரித்ததால், மாநிலத்தின் ரூ.2,500 கோடி மதிப்புள்ள நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது." என்று பேசினார்.
