தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tamil Writer Pa Jayaprakasam Passed Away

Pa Jayaprakasam passed away: எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் காலமானார்

Karthikeyan S HT Tamil
Oct 23, 2022 09:22 PM IST

தமிழின் முதுபெரும் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் உடல்நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இன்று காலமானார்.

எழுத்தாளர் பா. செயப்பிரகாசம்
எழுத்தாளர் பா. செயப்பிரகாசம்

ட்ரெண்டிங் செய்திகள்

மாணவப் பருவத்தில் 1965 -ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குபெற்று, இந்தியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (DEFENSE OF INDIA RULES) கைதாகி பாளையங்கோட்டைச் சிறைக்கு சென்றவர். தமிழ் ஈழத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தவர். பேரறிவாளன் விடுதலைக்காக பல்வேறு இலக்கிய கூட்டங்களிலும் அவர் பேசியுள்ளார்.

ஒரு ஜெருசலேம், அம்பலக்காரர் வீடு, குற்றம், வேரில்லா உயிர்கள், பொய் மலரும், காடு, கரிசலின் இருள்கள், இரவுகள் உடையும், இரவுகள் உடையும், ஒரு கிராமத்து ராத்திரிகள், கந்தக பூமி, பனை நிழலில் வாழ்க்கை, கோபுரங்கள், அக்னி மூலை, மயான காண்டம் சுதந்திர நேரம், சாமியார் மடம், கொடை உள்பட ஏராளமான சிறுகதைத் தொகுப்புகளை பா. செயப்பிரகாசம் எழுதியுள்ளார்.

 

மறைந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன் உடன் பா.செயப்பிரகாசம்.
மறைந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன் உடன் பா.செயப்பிரகாசம்.

சூரிய தீபன் என்ற புனைப்பெயரில் பல்வேறு கதைகள், கவிதைகள், நாவல்கள் மற்றும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல் குறித்தும் பா. செயப்பிரகாசம் எழுதியுள்ளார். இவரது படைப்புகள் தமிழின் முன்னணி இதழ்களில் வெளிவந்துள்ளன. பள்ளிக்கூடம், மணல் என இரண்டு நாவல்களையும் அவர் எழுதியுள்ளார்.

1968 முதல் 1971 ஆம் ஆண்டு வரை மதுரையில் கல்லூரி விரிவுரையாளராகவும். 1971-ம் ஆண்டு முதல் 1999 வரை, தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் இணை இயக்குனராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக விளாத்திகுளத்தில் இன்று (அக்.23) அவர் காலமானார். விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள பா.செயப்பிரகாசம் இல்லத்தில் நாளை இரங்கல் கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL_Entry_Point