HBD Nellai Kannan: தமிழ் கடல் நெல்லை கண்ணன் பிறந்தநாள் இன்று!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Hbd Nellai Kannan: தமிழ் கடல் நெல்லை கண்ணன் பிறந்தநாள் இன்று!

HBD Nellai Kannan: தமிழ் கடல் நெல்லை கண்ணன் பிறந்தநாள் இன்று!

Karthikeyan S HT Tamil
Published Jan 27, 2024 06:16 AM IST

சிறந்த தமிழ் இலக்கியப் பேச்சாளரும், தமிழறிஞருமான மறைந்த நெல்லை கண்ணனின் பிறந்தநாள் இன்று. இந்த சிறப்பு நாளில் அவரது வாழ்வின் சில சம்பவங்களை இங்கே அறியலாம்.

நெல்லை கண்ணன்
நெல்லை கண்ணன்

காங்கிரஸ் கட்சிக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு மேடைகளில் பிரசாரம் மேற்கொண்டவர். தனக்காக வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர் காமராஜர். அவரைப் போல இன்னொரு தலைவரைப் பார்க்க முடியுமா..? என அடிக்கடி பேசக்கூடியவர் நெல்லை கண்ணன். காமராஜர் மீதும் இந்திரா காந்தி மீதும் அளவற்ற பற்றுக் கொண்டிருந்தவர்.

1970ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மேடைகளில் அவரது தமிழ் பேச்சு ஒலித்து வந்தது. நெல்லை கண்ணனின் சிறந்த பேச்சாற்றலால் பலரும் ஈர்க்கப்பட்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும், துணைத் தலைவராகவும் நெல்லை கண்ணன் பதவி வகித்தார். 

குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர் நெல்லை கண்ணன். சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் 'தமிழ்க் கடல்' என அழைக்கப்பட்டார். 

தமிழை நேசித்த அவரது பேச்சைக் கேட்க ரசிகர்கள் இருக்கும் அளவுக்கு நகைச்சுவையாகவும் அதே சமயம் ஆழ்ந்த கருத்துடனும் பேசக்கூடியவர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நடக்கும் விழாக்களில் நெல்லை கண்ணன் பேசுவதாக இருந்தால் திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு இணையாக அவரது படத்துடன் கூடிய பேனர்கள் வைக்கப்படுவது வழக்கம். எந்த தலைப்பாக இருந்தாலும் மடைதிறந்த வெள்ளம் போல் பேசக்கூடிய ஆற்றல் படைத்தவர்.  நெல்லை கண்ணனின் தமிழ் ஆற்றலை பாராட்டி தமிழக அரசு அவருக்கு இளங்கோவடிகள் விருது வழங்கி கெளரவித்திருந்தது. மறைந்த நெல்லை கண்ணனின் பிறந்தநாள் இன்று (ஜன.27). இந்நாளில் அவரது புகழை நினைவு கூர்வோம்..தமிழ் உள்ளவரை நெல்லை கண்ணனின் தமிழ் பேச்சு பட்டிதொட்டி எங்கும் ஒலித்துக்காெண்டே இருக்கும்..!

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.