‘அனுமதியின்றி மஞ்சுவிரட்டு.. 10 பேர் காயம்.. 5 ஆயிரம் பேர் பங்கேற்பு’ காரைக்குடி அருகே சம்பவம்!
இந்த ஆண்டின் முதல் மஞ்சுவிரட்டு போட்டி என்பதால் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வருகை தந்து மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர். அனுமதி இன்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டு குறித்து மதகுபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி அருகே கீழக்கோட்டை கிராமத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடந்த தமிழகத்தின் முதல் மஞ்சுவிரட்டு போட்டியில், காளைகளை அடக்க இளைஞர்கள் ஆர்வமுடன் வந்தனர். அனுமதி இன்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கீழக்கோட்டை கிராமத்தில் கிராம பொதுமக்கள் சார்பாக இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனுமதி இன்றி மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. சிவகங்கை, ராமநாதபுரம்,மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் சரக்கு வாகனங்களில் அழைத்து வரப்பட்டு பாரம்பரிய முறையில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
தமிழ்நாட்டின் முதல் மஞ்சுவிரட்டு போட்டி
2025 ம் ஆண்டின் தமிழகத்தின் முதல் மஞ்சுவிரட்டு போட்டி என்பதால் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான காளையர்கள் காளைகளை அடக்க படையெடுத்து வந்திருந்தனர். அவிழ்த்து விடப்பட்டு சீறி பாய்ந்து சென்ற காளைகளை காளையர்கள் விரட்டி சென்று அடக்க முயன்றனர். சில காளைகள் பிடிபட்டாலும் பல காளைகள் பிடிபடாமல் ஓடியது நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குவிந்த பார்வையாளர்கள்.. பாய்ந்த காளைகள்
இந்த ஆண்டின் முதல் மஞ்சுவிரட்டு போட்டி என்பதால் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வருகை தந்து மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர். அனுமதி இன்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டு குறித்து மதகுபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பரிசுகள், பாராட்டுகள் என கலை கட்டிய இந்த மஞ்சுவிரட்டிப் போட்டியை பெரும்பாலான கிராம மக்கள் திரண்டு வந்து பார்த்த மகிழ்ந்தனர். பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் ஆர்வமாக வந்து காளைகளை அடக்க முயன்றனர். புத்தாண்டில், த்ரில்லிங் அனுபவமாக இருந்த மஞ்சுவிரட்டுப் போட்டி நடந்து முடிந்துள்ளது.
டாபிக்ஸ்