'என் பதவியே போயிடும்! கலங்கிய பெருந்தகை! கலாய்த்த துரைமுருகன்!’ சட்டப்பேரவையில் சிரிப்பலை!
"திருப்புகழ் கமிட்டியை அரசு நிறைவேற்றும் என்று வாக்குறுதி கொடுத்து உள்ளேன். எனது தொகுதியில் எனக்கு நெருக்கடி உள்ளது. வரும் நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் நிறைவேற்றவில்லை என்றால் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வது உங்களிடம்தான் உள்ளது"
இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் எனது எம்.எல்.ஏ பதவிக்கே நெருக்கடி ஏற்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியது சட்டப்பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நேற்று முதல் தொடங்கி நடந்து வருகின்றது. 2ஆம் நாளான இன்றைய தினம் கேள்வி நேரத்தின் போது பேசிய ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதி எம்.எல்.ஏவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப்பெருந்தகை, ”கடந்த வாரம் பெய்த மழையால் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட வரதராஜபுரத்தில் உள்ள முல்லை நகர், தனலட்சுமி நகர், பிடிசி நகர், அஷ்டலட்சுமி நகர் ஆகிய இடங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த செய்திகள் பத்திரிக்கைகளிலும் வெளி வந்து உள்ளது. மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அனுபவம் வாய்ந்தவர். எதை எடுத்தாலும் முழுமையாக செய்யக்கூடியவர். அறைகுறையாக செய்யாதவர் என்பது நாடு அறியும். ஆனால் அந்த பகுதியில் அரைகுறையாக வேலை நடந்து உள்ளது. ஆனால் முன்பு வெள்ளம் வந்தால் 20 நாட்கள் வரை தண்ணீர் தேங்கும், உங்கள் முயற்சியால் ஒரு நாளில் வடிந்து விடுகின்றது. திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரையை முழுமையாக நிறைவேற்றினால்தான், அங்கு தண்ணீர் தேங்காது. ஒரத்தூர், படப்பை, மணிமங்கலம் ஏரியை நீர்த்தேக்கம் ஆக ஆக்கினால் இந்த பகுதியில் தண்ணீர் வராது. திருப்புகழ் கமிட்டியை அரசு நிறைவேற்றும் என்று வாக்குறுதி கொடுத்து உள்ளேன். எனது தொகுதியில் எனக்கு நெருக்கடி உள்ளது. வரும் நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் நிறைவேற்றவில்லை என்றால் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வது உங்களிடம்தான் உள்ளது. எனவே எனது கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும்”. என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “உறுப்பினர் நன்றாக என்னிடம் மாட்டிக்கொண்டார். அவர் அடுத்த முறை எம்.எல்.ஏவாக வர வேண்டும் என்றால் அது என் கையில்தான் உள்ளது. திருப்புகழ் கமிட்டி மட்டுமல்ல; திருவாசகம் கமிட்டியாக இருந்தாலும் சரி. நீங்கள் சொன்னது எனக்கு தெரியும். கவலைப்பட வேண்டாம். குறைத்தீர்க்கப்படும்” என கூறினார்.