தவெக பூத் கமிட்டி கூட்டம்: ’ஆட்டத்தை கொங்கு மண்டலத்தில் இருந்து தொடங்கும் விஜய்!’
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தவெக பூத் கமிட்டி கூட்டம்: ’ஆட்டத்தை கொங்கு மண்டலத்தில் இருந்து தொடங்கும் விஜய்!’

தவெக பூத் கமிட்டி கூட்டம்: ’ஆட்டத்தை கொங்கு மண்டலத்தில் இருந்து தொடங்கும் விஜய்!’

Kathiravan V HT Tamil
Published Apr 21, 2025 11:30 AM IST

இந்தக் கருத்தரங்கில், நம் வெற்றித் தலைவர் அவர்கள் கலந்துகொண்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாகக் கழகம் சார்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்ற உள்ளார்.

தவெக பூத் கமிட்டி கூட்டம்: ’ஆட்டத்தை கொங்கு மண்டலத்தில் இருந்து தொடங்கும் விஜய்!’
தவெக பூத் கமிட்டி கூட்டம்: ’ஆட்டத்தை கொங்கு மண்டலத்தில் இருந்து தொடங்கும் விஜய்!’

பூத் கமிட்டியை வலுப்படுத்தும் விஜய்

விரைவில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்த உள்ளதாக தவெக தலைவர் விஜய் கூறி இருந்தார். இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் இதன் முதல் கூட்டத்தை அறிவித்து இருப்பது 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான விஜய்யின் முதல் ஆட்டமாக பார்க்கப்படுகிறது.

நம் செல்வாக்கு வளர்கிறது

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்தப் பேரன்பையும் பேராதரவையும் பெற்ற நம் வெற்றித் தலைவர் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய நாள் முதலே நமக்கான வெற்றிப் பாதை விரிவடைந்துகொண்டே வருகிறது, நம் செல்வாக்கு வளர்ந்துகொண்டே வருகிறது. இதை நமது கொடி அறிமுக விழா, வெற்றிக் கொள்கைத் திருவிழா, இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழா மற்றும் இதர மக்கள் பணிகள் வாயிலாகத் தொடர்ந்து கண்டு வருகின்றோம்.

கோவையில் பூத் கமிட்டி கூட்டம்

தமிழக மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கையின் அடுத்தக் கட்டமாக, நமது கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம், வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் (26.04.2025 & 27.04.2025) தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோயம்புத்தூரில், குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதை நம் வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் உங்களுடன் பெருமகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் முதல் நாளில் 10 கழக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும், இரண்டாம் நாளில் 13 கழக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் பங்கேற்பார்கள்.

இந்தக் கருத்தரங்கில், நம் வெற்றித் தலைவர் அவர்கள் கலந்துகொண்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாகக் கழகம் சார்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்ற உள்ளார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பூத் கமிட்டியே ஆட்சி மாற்றத்தின் அடித்தளம்

ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமே வாக்காளர்களும், வாக்குச்சாவடி முகவர்களும் தான். எனவே தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி தொடர்பான பணிகளுக்கு முதுகெலும்பாகத் திகழும் வாக்குச்சாவடி முகவர்கள் மட்டும், நம் வெற்றித் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறேன். ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற உள்ள நம் வெற்றித் தலைவர் அவர்களின் கரங்களுக்கு வலுச் சேர்ப்போம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.