Ambedkar Jayanti 2025: தவெக அலுவலகத்தில் சிலை இருக்கும்போது சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விஜய் மரியாதை செய்தது ஏன்?
அம்பேத்கரை கொள்கைத் தலைவராகக் கருதும் விஜய், இதுபோன்ற நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்று, சமூக நீதி மற்றும் சமத்துவக் கருத்துகளை வலியுறுத்தி வருகிறார்.

அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சாலையோரம் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திலேயே அம்பேதக்ர், பெரியார், வேலுநாச்சியார்,அஞ்சலையம்மாள், காமராஜர் ஆகியோருக்கு சிலை உள்ள நிலையில், சாலையோரம் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திடீரென சென்று விஜய் மரியாதை செலுத்தியது ஏன் என்ற கேள்வி எழுந்து உள்ளது.
நாடு முழுவதும் அம்பேத்கரின் பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அரசு சார்பிலும் அவரது சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஐ சமத்துவ நாளாக அறிவித்ததன் அடிப்படையில், இந்நாள் ஆண்டுதோறும் சமத்துவ நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
முன்னறிவிப்பு இன்றி விஜய் செய்த சம்பவம்
இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய், பாலவாக்கத்தில் நேரில் சென்று அம்பேத்கரின் சிலைக்கு முன்னறிவிப்பு ஏதுமின்றி மரியாதை செலுத்தினார். காலை நேரத்தில் தனது காரில் தனது ஓட்டுநர் மற்றும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோருடன் சென்ற மார்பளவு உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செய்தார்.
பெரியாருக்கும் இதே பாணிதான்
முன்னதாக, பெரியாரின் 146வது பிறந்தநாளின்போது வேப்பேரியில் உள்ள பெரியார் சிலைக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பேத்கரை கொள்கைத் தலைவராகக் கருதும் விஜய், இதுபோன்ற நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்று, சமூக நீதி மற்றும் சமத்துவக் கருத்துகளை வலியுறுத்தி வருகிறார்.

டாபிக்ஸ்