தலைப்பு செய்திகள்: முருக பக்தர்கள் மாநாடு முதல் அதிமுக எம்.எல்.ஏ மறைவு வரை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தலைப்பு செய்திகள்: முருக பக்தர்கள் மாநாடு முதல் அதிமுக எம்.எல்.ஏ மறைவு வரை!

தலைப்பு செய்திகள்: முருக பக்தர்கள் மாநாடு முதல் அதிமுக எம்.எல்.ஏ மறைவு வரை!

Kathiravan V HT Tamil
Published Jun 22, 2025 08:10 AM IST

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு, வகுப்புவாத சக்திகள் மீது முதலமைச்சர் விமர்சனம், அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி மறைவு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தலைப்பு செய்திகள்: முருக பக்தர்கள் மாநாடு முதல் அதிமுக எம்.எல்.ஏ மறைவு வரை!
தலைப்பு செய்திகள்: முருக பக்தர்கள் மாநாடு முதல் அதிமுக எம்.எல்.ஏ மறைவு வரை!

1.மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு

மதுரையில் உள்ள பாண்டிக்கோயிலில் இன்று முருக பக்தர்கள் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்க மதுரை வந்து உள்ளனர். மாநாட்டுத் திடலில் அறுபடை வீடுகளின் மாதிரி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார், அதேசமயம் யோகி ஆதித்யநாத் தவிர்க்க முடியாத காரணங்களால் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என தகவல்.

2.முருகன் இந்திய கலாச்சார கடவுள்

மதுரை முருகன் மாநாடு நடைபெறு அரங்கிற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அறுபடை வீடுகளின் மாதிரிகளை பார்வையிட்டு தரிசனம் செய்தார், மேலும் முருகப்பெருமான் இந்திய கலாச்சாரத்திற்கான கடவுள் என பெருமிதம் தெரிவித்தார்.

3.மதுரையில் போக்குவரத்து மாற்றம்

மதுரை முருகன் மாநாட்டை முன்னிட்டு, ஊட்டி மதுரை மற்றும் மதுரையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பாண்டிக்கோயில் சந்திப்பு முதல் விரகனூர் சந்திப்பு வரை கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

4.திமுக அரசு மீது பாய்கிறார்கள்

சமூக நீதியை விரும்பாத வகுப்புவாத சக்திகள் தி.மு.க. மீது பாய்வதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். எல்லோரும் முன்னேறுவதை சில வகுப்புவாத சக்திகள் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எல்லோரையும் முன்னேற்றுகிற ஆட்சி என்பதால், சில வகுப்புவாத சக்திகளாலும், அவர்களுக்குத் துணை போகும் கொத்தடிமைக் கூட்டத்தாராலும் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என பேச்சு

5.தமிழ்நாட்டில் வானிலை முன்னறிவிப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஆறு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் ஒரு சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று பகல் நேர வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரையில் பதிவாக வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரிக்கக்கூடும் என்றும், அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் நிலவும் போது அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

6.மேட்டூர் அணை நீர்வரத்து நிலவரம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22469 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக 16000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

7.உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள்

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் பெறப்படும்.

8.தண்ணீர் லாரிகள் இயக்க தடை

சென்னை மாநகரில் காலை 7:30 மணி முதல் 9 மணி வரை பீக் ஹவர்ஸில் தண்ணீர் லாரிகளை இயக்குவதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் 7:30 மணிக்குள் குடிநீர் விநியோகம் செய்து முடிக்க காவல் ஆணையர் அருண் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

9.வால்பாறை எம்.எல்.ஏ. மறைவு

உடல்நலக் குறைவால் உயிரிழந்த வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் உடலுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார். கோவை அன்னூர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மலர் வளையம் வைத்து அவர் அஞ்சலி செலுத்தினார்.

10.வன்னியர் இடஒதுக்கீடு குறித்து அன்புமணி ஆதங்கம்

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நிலைப்பாடு மாறிவிட்டதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆதங்கம் தெரிவித்துள்ளார். நேரில் சந்தித்தபோது "ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்" என தன்னிடம் முதலமைச்சர் கேட்டதாக அன்புமணி கூறினார்.