Rajendra Balaji: ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு! மேலும் போட்டுக்கொடுக்கும் பால் முகவர் சங்கம்! இத்தனை முறைகேடுகளா?
அதிகபட்சமாக 4 லட்சம் ரூபாய்க்குள் வாங்க வேண்டிய மில்க் அனைலைசர் இயந்திரத்தை 82லட்சம் ரூபாய்க்கு வாங்கி தற்போதைய ஆட்சியில் நடைபெற்ற 18கோடி ரூபாய்க்கு மேலான இயந்திர தளவாடங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு

தீபாவளி பண்டிகைக்கு ஸ்வீட் தயாரித்ததில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.
ஆவின் அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை
இது தொடர்பாக அச்சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு பதிவு வரவேற்பிற்குரியது, அது போல் தீபாவளி இனிப்பு, C/F நியமனம், முறைகேடான பணி நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழல் முறைகேடுகளை மூடி மறைக்கும் பால்வளத்துறை, ஆவின் அதிகாரிகள் மீதும் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினில் கடந்த அதிமுக ஆட்சியில் 33 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆண்டுகள் பல கடந்தும் தமிழ்நாடு காவல்துறை ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கினை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தால் இவ்வழக்கை விசாரிக்க காவல்துறைக்கு விருப்பம் இல்லை என அதிருப்தி தெரிவித்து சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது சிபிஐ 3பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வரவேற்கிறது.
தண்டிக்காமல் காப்பாற்றப்படுகின்றனர்
மேலும் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினில் மதுரை, தேனி, விருதுநகர், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முறைகேடான பணி நியமனங்கள் நடைபெற்றது உறுதியான நிலையில் அவ்வாறு முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களை அப்போதைய ஆவின் நிர்வாக இயக்குநராக இருந்த, தற்போதைய பால்வளத்துறை செயலாளர் திரு. சுப்பையன் ஐஏஎஸ் அவர்கள் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டும் மதுரை, திருச்சி மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மற்ற மாவட்டங்களில் முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்யாமல் பால்வளத்துறை மற்றும் ஆவின் அதிகாரிகளின் ஆசியோடு பிற மாவட்டங்களுக்கு பணியிடை மாற்றம் செய்து விட்டனர்.
அத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளாக அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதும், முறைகேடாக பணியில் சேர்ந்தவர்கள் தற்போது வரை பணியில் இருப்பதோடு அந்த முறைகேடுகளுக்கு காரணகர்த்தாவாக இருந்த ஆவின் மற்றும் பால்வளத்துறை அதிகாரிகள் எவரும் இதுவரை தண்டிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஊழல் செய்தவர்களுக்கு பதவி உயர்வு
அதுமட்டுமின்றி ஊழல் செய்வதற்கென்றே ஆவின் அதிகாரிகள் திட்டமிட்டு செயல்படுத்திய திட்டங்கள், ஒவ்வொரு மாவட்ட ஒன்றியங்களிலும் தேவையற்ற இயந்திர தளவாடங்கள் கொள்முதல், பால் கொள்முதல், பால் பவுடர், வெண்ணெய் மற்றும் மூலப்பொருட்கள் கொள்முதல் என ஆவினில் நடைபெற்றுள்ள பல முறைகேடுகளையும், அதனால் ஆவினுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்தும் பால் கூட்டுறவுகளின் தணிக்கை இயக்ககம் ஒவ்வொரு ஆண்டும் தனது ஆண்டு தணிக்கை அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டு (உதாரணம்
2019-2020) ஆவினுக்கும், அரசுக்கும் அறிக்கை தாக்கல் செய்தும் கூட கடுங்குறைகள் என சுட்டிக்காட்டப்பட்ட எந்த ஒரு அதிகாரிகள் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும், அவ்வாறான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி கெளரவிக்கப்பட்டிருப்பதும் மிகுந்த வருத்தத்திற்குரியதாகும்.
பால் கொள்முதலில் முறைகேடு
எனவே கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை, தேனி, விருதுநகர், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முறைகேடாக நடைபெற்ற 236 பணி நியமனங்கள், 2019-2021 இரண்டாண்டுகளில் மட்டும் ஆவினுக்கு சுமார் 36கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்திய C/F எனும் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் நடைமுறை, அதிகபட்சமாக 4லட்சம் ரூபாய்க்குள் வாங்க வேண்டிய மில்க் அனைலைசர் இயந்திரத்தை 82லட்சம் ரூபாய்க்கு வாங்கி தற்போதைய ஆட்சியில் நடைபெற்ற 18கோடி ரூபாய்க்கு மேலான இயந்திர தளவாடங்கள் கொள்முதல், அது போல 2021 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஆவினுக்கான பால் கொள்முதலை திட்டமிட்டு குறைத்து கலப்படத்திற்கு பெயர் பெற்ற ராஜஸ்தான், மகராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் போலியான கூட்டுறவு பால் நிறுவனங்களை உருவாக்கி அந்நிறுவனங்களிடமிருந்து பால் பவுடர், வெண்ணெய் கொள்முதல் செய்ததன் மூலம் நடைபெற்ற பலகோடி ரூபாய் முறைகேடு என அனைத்து ஊழல், முறைகேடுகள் தொடர்பாகவும், கடந்த 2011ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை பால் கூட்டுறவுகளின் தணிக்கை இயக்ககத்தின் ஆண்டு தணிக்கை அறிக்கையில் கடுங்குறைகள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஷரத்துகள் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சிபிஐ அமைப்பை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

டாபிக்ஸ்