Mysskin: ‘பச்சை பச்சையாக பேசிய இயக்குநர் மிஷ்கின்!’ கைத்தட்டி சிரித்த பா.ரஞ்சித்! பால் முகவர் சங்கம் கண்டனம்!
அதே மேடையில் அமர்ந்திருந்த வெற்றிமாறன், பா.ரஞ்சித், லிங்குசாமி, அமீர் போன்ற முன்னணி இயக்குனர்களும், சக நடிகர், நடிகைகளும் இயக்குனர் மிஸ்கின் அவர்களின் சபை நாகரீகமற்ற, அருவருப்பான, ஆபாசமான பேச்சினை தடுக்காமல் கைதட்டி, சிரித்து ரசித்துக் கொண்டிருந்தது அருவெறுப்பின் உச்சம்

சினிமா நிகழ்ச்சி ஒன்றியில் ஆபாச வார்த்தைகளை பேசிய இயக்குநர் மிஸ்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.
குடியை ஊக்குவிக்கும் வகையில் பேசுவதா?
இது தொடர்பாக பால் முகவர் சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் சனிக்கிழமை (18.01.2024) நடைபெற்ற "Bottle Radha" இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் மிஸ்கின் அவர்கள் தான் மட்டுமே மேதாவி என்பதாக நினைத்துக் கொண்டு பொதுவெளிகளில் கண்ணியம் மிக்க நபர்கள் பேசவே கூசுகின்ற, மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தி பேசியிருப்பதோடு, "ஒரு குவார்ட்டர் அடித்து விட்டு படம் பார்க்க வா, இல்லேன்னா படம் பார்த்துட்டு போய் ஒரு குவார்ட்டர் அடி" என குடியை ஊக்குவிக்கும் வகையில் பேசியிருப்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை தேவை!
அதிலும் அந்த விழா மேடையில் சிறப்பு அழைப்பாளர்களாகவும், மேடைக்கு முன் பார்வையாளர்களாகவும் பெண்கள் பலர் கலந்து கொண்டிருந்த போதும் கூட அதே மேடையில் அமர்ந்திருந்த வெற்றிமாறன், பா.ரஞ்சித், லிங்குசாமி, அமீர் போன்ற முன்னணி இயக்குனர்களும், சக நடிகர், நடிகைகளும் இயக்குனர் மிஸ்கின் அவர்களின் சபை நாகரீகமற்ற, அருவருப்பான, ஆபாசமான பேச்சினை தடுக்காமல் கைதட்டி, சிரித்து ரசித்துக் கொண்டிருந்தது அருவெறுப்பின் உச்சம் மட்டுமல்ல மிஸ்கின் அவர்களோடு சேர்ந்து கண்டிக்கப்பட வேண்டியவர்களும் கூட என்பதால் அவர்கள் மீதும், விழா ஏற்பாட்டாளர்கள் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.
வெட்ட வெளிச்சமாக்கிவிட்டது!
சமீப காலமாகவே திரையுலகினரின் போதை கலாச்சாரம், பாலியல் சீண்டல்கள் குறித்து பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வரும் சூழலில் மிஸ்கின் அவர்களின் அருவெறுக்கத்தக்க, ஆபாசமான, கீழ்த்தரமான பேச்சு திரையுலகினரின் போதை கலாச்சாரத்தையும், அவர்களின் தரத்தையும் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது என்றால் அது மிகையாகாது.
பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!
எனவே "Bottle Radha" இசை வெளியீட்டு விழா மேடையிலும், மேடைக்கு முன்பும் பெண்கள் இருப்பது தெரிந்தும் அருவருக்கத்தக்க, ஆபாசமான வார்த்தைகளில் பேசிய இயக்குனர் மிஸ்கின் மட்டுமின்றி அவரது கீழ்த்தரமான பேச்சினை தடுக்காமல் அதே விழா மேடையில் பொதுவெளியில் கைதட்டி, சிரித்து ரசித்துக் கொண்டிருந்த வெற்றி மாறன், பா.ரஞ்சித், லிங்குசாமி, அமீர் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
