RN Ravi vs Appavu: ’கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் குறைச்சல் அல்ல!’ ஆளுநருக்கு அப்பாவு நறுக் கேள்வி!
”TamilNadu Assembly 2024: ஆளுநர் அவை நடவடிக்கை முடியாமலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அப்போது சபாநாயகர் அப்பாவு, ”ஜனகன மண இனிமேல்தான் பாடுவாங்க!” என கூறினார்”
தமிழ்நாடு ஆளுநர் உரை தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது. சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், மதிப்பிற்குரிய சட்டப்பேரவை தலைவர் அவர்களே, மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே, மரியாதைக்குரிய சட்டப்பேரவை உறுப்பினர்களே, ஊடக நண்பர்களே, தமிழக சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம் என தமிழில் பேசி தனது உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கினார்.
இந்த புத்தாண்டு கூடுதல் மகிழ்ச்சியையும், நல்வரவையும் கொண்டு வரட்டும் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, “பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து” என்ற குரலை வாசித்தார். தொடர்ந்து பேசுகையில், என்னுடைய தொடர் கோரிக்கை, அறிவுரை என்னவென்றால் தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும்.
நிகழ்ச்சி தொடங்கும்போதும் முடியும்போதும் தேசிய கீதம் இசைப்பது புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று கூறிய ஆளுநர், தமிழ்நாடு அரசின் உரையில் பல பகுதிகளை தார்மீக அடிப்படையிலும் உண்மையின் அடிப்படையிலும் என்னால் ஏற்க முடியாது என்ற அவர் வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த், ஜெய் பாரத் நன்றி! என்று கூறி தமது உரையை முடித்துக் கொண்டார். இதனை தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழ் பதிப்பை சபாநாயகர் அப்பாவு பேரவையில் வாசித்தார்.
பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு, நம்முடைய மாண்புமிகு ஆளுநர் அவர்களை முறைப்படி அழைத்து வந்து ஆளுநர் உரைக்கு தயாரிப்புகளை அவரின் ஒப்புதல் பெற்று வாசிக்க வந்தார்கள். அவர்கள் அதை குறைவாக வாசித்தார்கள், அதனை குறையாக சொல்ல நான் விரும்பவில்லை. ஆனால் ஜனகன மன முதலில் பாடியிருக்க வேண்டும் என ஒரு கருத்தை சொன்னார்கள். எல்லோருக்கும் நிறைய கருத்துகள் உள்ளது, அதையெல்லாம் பேசுவது மரபல்ல, மிக உயர்ந்த பதவியில் இருக்கும் மாண்புமிகு ஆளுநர் அவர்களை இந்த அரசு, முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் மாண்போடு நடத்துவதுதான் தமிழ்நாடு அரசின், முதல்வரின் பண்பு
ஆளுநரை நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன், உங்கள் மனதில் இருப்பதை நீங்கள் சொன்னீர்கள், எங்கள் மனதில் உள்ளதை சொல்கிறோம், இவ்வளவு பெரிய வெள்ளம், புயல் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒரு பைசா கூட நிதி தரவில்லை. பல லட்சம் கோடி ரூபாய் நம்முடைய மாண்புமிகு பிஎம் கேர் பண்டில் உள்ளது. இந்திய மக்களால் கணக்கு கேட்க முடியாத பண்டில் இருந்தாவது ஒரு ஐம்பதாயிரம் கோடி ரூபாயை நீங்கள் வாங்கித் தரலாமே என நான் கேட்கலாமே! சாவர்கர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல தமிழ்நாடு சட்டமன்றமும் என கூறினார்.
இதனை கேட்ட ஆளுநர் அவை நடவடிக்கை முடியாமலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அப்போது சபாநாயகர் அப்பாவு, ”ஜனகன மண இனிமேல்தான் பாடுவாங்க!” என கூறினார்.