’ஆணவக் கொலைகள் தமிழ்நாட்டில்தான் அதிகம்!’ அரசுக்கு எதிராக சீறும் கே.பாலகிருஷ்ணன்! திமுக கூட்டணியில் விரிசலா?
கடந்த அரைநூற்றாண்டு கால ஆட்சியில் பெரியாரிய கொள்கைகள் படிப்படியாக கைவிடப்பட்டுவிட்டதாக கே.பாலகிருஷ்ணன் வேதனை!
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் ஆணவக் கொலைகள் அதிகம் நடைபெறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார்.
இந்தியாவிலேயே ஆணவக் கொலைகள் அதிகம்
தந்தை பெரியாரின் நினைவுநாளையொட்டி, அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
தந்தை பெரியார் அவர்கள் பகுத்தறிவு கொள்கையை பட்டித்தொட்டியெங்கும் பரப்பினார். மதம் மற்றும் சாதிவெறி சக்திகளுக்கு சவாலாக அவர் இருந்தார். சாதிய அணி சேர்க்கைக்கு முடிவுகட்ட வாழ்நாள் முழுமையும் போராடினார். சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக முதலில் குரல் கொடுத்து வந்தார். பெண் அடிமைதனம், குழந்தை திருமணங்களை எதித்தார்.
தந்தை பெரியாரின் வழிவந்த திராவிட இயக்கங்கள்தான் தமிழ்நாட்டில் ஆட்சி செலுத்தி வருகின்றது. ஆனாலும் கூட இந்தியாவிலேயே ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தலித் மக்களுக்கு அனுதினமும் கொடுமைகள் இழைக்கப்படுகிறது. சாதிய உணர்வுகளும், சாதிய அணிசேர்க்கையும் கொடிகட்டி பறக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. என கூறினார்.
பெரியார் கொள்கைகள் கைவிடப்பட்டன
கடந்த அரைநூற்றாண்டு கால ஆட்சியில் பெரியாரிய கொள்கைகள் படிப்படியாக கைவிடப்பட்டு உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பெரியார் நினைவுநாளில் அவர் தூக்கிபிடித்த சமூக ஒற்றுமை, சாதிகளற்ற சமூகம் வேண்டும். பெரியாரின் திசை வழியில் பயணிக்க வேண்டும் என்று அழைக்கிறோம். தந்தை பெரியாரின் கொள்கைகளை அமல்படுத்த முன்வர வேண்டும் என தெரிவித்தார்.
திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரித்து உள்ளது என்ற கே.பாலகிருஷ்ணனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.