சிறுவன் கடத்தல் வழக்கு: ’ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் தொடரும்!’ தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!
”ஏடிஜிபி ஜெயராமனின் இடைநீக்கத்தை திரும்பப் பெறுவதற்கு உடன்பாடு இல்லை என்றும், இந்த நடவடிக்கை தொடரும் என வாதம்”

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனின் இடைநீக்க நடவடிக்கையை திரும்பப் பெறுவதற்கு எந்தத் திட்டமும் இல்லை என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில், ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டு, பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தியும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, நீதிமன்றத்தால் கண்டனத்துக்கு உள்ளாகியிருந்தார்.
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர், ஏடிஜிபி ஜெயராமனின் இடைநீக்கத்தை திரும்பப் பெறுவதற்கு உடன்பாடு இல்லை என்றும், இந்த நடவடிக்கை தொடரும் என்றும் வாதிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், இடைநீக்கம் தொடர வேண்டும் எனவும் அரசு தரப்பு வலியுறுத்தியது.