TN Governor and CM: தமிழக ஆளுநர் மற்றும் முதலமைச்சர் திடீர் சந்திப்பு - பின்னணி என்ன?
தமிழக ஆளுநர் மற்றும் முதலமைச்சர் திடீர் சந்திப்பு குறித்த பின்னணியைக் காண்போம்.

நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் தொடர்பான வழக்கில் முதலமைச்சரை அழைத்துப் பேச வேண்டும் என ஆளுநரை, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன் எதிரொலியாக மாலை 5.30 மணிக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவியின் அழைப்பினை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகை சென்று அவரை சந்தித்தார். அப்போது நிலுவையில் இருக்கும் பல்வேறு மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைத்திட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர்ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.ஆர்.கண்ணப்பன், தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதுதொடர்பாக ராஜ்பவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''சந்திப்பு சுமுகமாக இருந்தது. தமிழக ஆளுநரும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து கலந்துரையாடி, தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
தமிழக ஆளுநர், தமிழக மக்களின் நலனுக்கான தனது முழு அர்ப்பணிப்பையும் தருவதாக மீண்டும் வலியுறுத்தினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எல்லைக்குள் மாநில அரசுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
மேலும், தமிழக ஆளுநர் - முதலமைச்சருடன் அவ்வப்போது சந்திப்பதன் அவசியத்தையும் நன்மையையும் வலியுறுத்தினார்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் ஆளுநரிடம் வைத்த கோரிக்கைகள்:
▪️ உச்சநீதிமன்ற கருத்துகளை மனதில் கொண்டு நிலுவை மசோதாக்கள், கோப்புகளுக்கு உரிய காலத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
▪️ வருங்காலங்களில் இதுபோன்ற தாமதங்களை ஆளுநர் தவிர்க்க வேண்டும்.
▪️ நிலுவையில் உள்ள மசோதாக்கள், கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.
▪️ அரசியல் சாசனத்தில் எங்கும் குறிப்பிடாத வகையில் தேவையின்றி ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பிய 10 முக்கிய மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும்.
▪️ 10 மசோதாக்களுக்கு உடனே ஒப்புதல் அளித்து அரசுக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.
▪️ அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கு தொடர கோரும் கோப்புகளுக்கும் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
