Tamil Nadu: ’கடன் வாங்குவதில் நம்பர் ஒன் மாநிலமான தமிழகம்!’ மேலும் 37,000 கோடி கடன் வாங்க திட்டம்!
”தமிழ்நாடு அரசின் கடன் ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசின் வரவு-செலவு பற்றாக்குறையை குறைப்பதற்காக மாநில வளர்ச்சிக் கடன்கள் (SDLs) எனப்படும் கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் சந்தையில் இருந்து மாநில அரசு கடன்களை வாங்கி வருகிறது”
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சந்தைக் கடன்கள் குறித்த விவரத்தில் 2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூபாய் 37,000 கோடி கடன் வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் கடன் ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசின் வரவு-செலவு பற்றாக்குறையை குறைப்பதற்காக மாநில வளர்ச்சிக் கடன்கள் (State Development Loans-SDLs) எனப்படும் கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் சந்தையில் இருந்து மாநில அரசு கடன்களை வாங்கி வருகிறது.
இதன் மூலம் 2023-24 நிதியாண்டில் (டிசம்பர் வரை) இதுவரை, மாநில அரசு 76,000 கோடி ரூபாயை இதன் மூலம் திரட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் ரூபாய் 1,43,197.93 கோடி கடன் பெற்று ரூபாய் 51,331.79 கோடியை திருப்பிச் செலுத்த திட்டமிட்டுள்ளதாக மாநில பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-23 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளில், தமிழக அரசின் மொத்த சந்தைக் கடன்கள் ரூபாய் 87,000 கோடியாக இருந்தது. ஆனால் இது சமீபகாலங்களில் தொடர்ந்து அதிகரித்து கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசு மாறி உள்ளது.
RBI அறிக்கையின்படி மாநிலத்தின் மொத்த நிலுவைத் தொகையான ரூபாய் 8.34 லட்சம் கோடியில் மாநில வளர்ச்சி கடன்கள் சுமார் ரூபாய் 6 லட்சம் கோடியைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்