Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை திட்டம்! 8,833 பேரை அதிரடியாக நீக்கிய அரசு! ஏன் தெரியுமா?
”அக்டோபர் மாதத்திற்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்”
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஒரு நாள் முன்னதாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 27.03.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000/- உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது.
தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு மக்கள் நலத்திட்டமும், தேவையுள்ள ஒருவர்கூட விடுபடாமல் தகுதியான பயனாளிகளைச் சென்றுசேர வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு அதிக அக்கறையுடன் செயல்பட்டுவருகிறது.
அதுபோலவே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கும் தகுதியான பயனாளிகளைக் கண்டறிவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. '
அவற்றில் 1.06 கோடி தகுதியான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான உரிமைத் தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 1000/- வீதம் முதல் தவணையாக மொத்தம் ரூபாய் 10,65,21,98,000/- அவர்களின் வங்கிக் கணக்கின் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது. இத்தனை பயனாளிகளுக்கு ஒரே நேரத்தில் வங்கிக் கணக்கில் அரசின் நலத்திட்ட நிதி வரவு வைக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
நடப்பு அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட வேண்டிய அக்டோபர் 15, அரசு விடுமுறை நாள் என்பதால், இத்திட்டத்தின் கீழ் பயனடையும் அனைத்து மகளிருக்கும், ஒரு நாள் முன்னதாகவே உரிமைத் தொகையினை அனுப்பி வைக்கத் தாயுள்ளத்தோடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகுதியான பயனாளி ஒருவர்கூட விடுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கில், திருநங்கைகள் உள்ளிட்ட பல்வேறு தகுதியான குடும்பத் தலைவியர் கண்டறியப்பட்டு, அக்டோபர் மாதத்திற்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உரிமைத்தொகை பெற்றுக்கொண்டவர்களில் இறந்துபோனவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட 8,833 பெயர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளன.
நடப்பு அக்டோபர் மாதத்திற்கான 1,06,48,406 மகளிருக்கான ரூபாய் 1,06,48,406,000/- உரிமைத்தொகையானது ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 14 அன்றே அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாகக் கொண்டுசேர்க்கப்பட்டுள்ளது.
இப்பயனாளிகளில் முறையான வங்கிக் கணக்கினைக் கொண்டிராத 87,785 பயனாளிகளுக்கு அஞ்சல் பணவிடை மூலமாகவும் உரிமைத்தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சில திட்டங்கள் தொடங்கப்பட்டு சில காலத்திற்குப் பிறகே பலன் தர ஆரம்பிக்கும். ஆனால், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டமானது, திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதலே பொதுமக்கள் மத்தியில், குறிப்பாகக் குடும்பத் தலைவிகள் மத்தியில் சிறப்பான நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதே இத்திட்டத்தின் மாபெரும் வெற்றியாகும்.
இத்திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் மாதந்தோறும் உரிமைத்தொகை சென்றுசேர்வதோடு, தகுதியுள்ள ஒவ்வொருவரும் திட்டத்தில் இணைக்கப்படுவதற்கான வாய்ப்போடும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதே இதன் தனிச்சிறப்பு என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
டாபிக்ஸ்