தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Kathiravan V HT Tamil
May 16, 2024 07:33 PM IST

காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டில்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை“ என்ற செய்தி 16.05.2024 நாளிட்ட பிரபல நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இதுபோன்று தமிழ்நாடு அரசு எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கவில்லை என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!
’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

ட்ரெண்டிங் செய்திகள்

காவிரி குழு கூட்டம் - ஈபிஎஸ் கண்டன அறிக்கை 

காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டதாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை அடுத்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். அதில் “ நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்த விடியா திமுக அரசின் கைகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக அரசு சிக்கி சீரழிந்து வருவதோடு, தமிழக மக்களும் பல்வேறு வகைகளில் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தமிழக மக்களின் நலன்களை, உரிமைகளை தங்களின் சுயநலத்திற்காகவும், தங்களது குடும்பத்தினர் நடத்திவரும் தொழில்களுக்காகவும் அண்டை மாநிலங்களிடம் அடகு வைத்துவிட்டது இந்த விடியா திமுக அரசு. கர்நாடகத்தில் தங்களது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் நிலையில்கூட, காவிரியில் தமிழகத்திற்குண்டான உரிமை நீரை கேட்டுப் பெறாமல் கபட நாடகம் ஆடி வருகிறார் பொம்மை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின். டெல்லியில் நடைபெற உள்ள காவிரி நீர் முறைபடுத்தும் குழுக் கூட்டத்தில், தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் நேரடியாகச் சென்று பங்கேற்பதை இந்த விடியா திமுக அரசு தடை விதித்துள்ளதாக வந்துள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் காவிரியில் இருந்து 177.25 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஒவ்வொரு மாதமும் முறைப்படி தண்ணீர் வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைபடுத்தும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மைக்கு தேவையான பரிந்துரைகளை, முறைபடுத்தும் குழு வழங்க வேண்டும். இந்த அமைப்புகளின் கூட்டங்கள் டெல்லியில் நடைபெறுவது வழக்கம்.

இதில் உறுப்பினர்களாக உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் டெல்லி சென்று கூட்டத்தில் பங்கேற்று தங்களது மாநிலங்களின் கருத்துகளை வலியுறுத்துவார்கள். தமிழக அரசு அதிகாரிகள் டெல்லி செல்லாமல், ஆன்லைன் வாயிலாக காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று நீர்வளத்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்தைவிட, காவிரி நீர் முறைபடுத்தும் கூட்டத்தில்தான் திடமான விவாதங்கள் நடத்தி தமிழகத்தின் உரிமையைக் காக்க முடியும். விடியா திமுக அரசு பதவியேற்றதில் இருந்து, நீர்வளத் துறை அதிகாரிகள் இந்தக் கூட்டங்களில் தமிழகத்தின் உரிமைகளைப் பெரிதாக விவாதிப்பதில்லை என்று சக அதிகாரிகளே குற்றம் சாட்டுவதாகச் செய்திகள் வருகின்றன. 

கடந்த முறை டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழகப் பிரதிநிதிகளுக்கு தெரியாமலேயே, மேகதாது அணை கட்டுமான பிரச்சனையை மத்திய நீர்வளத் துறை கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்ட அவலமும் அரங்கேறியது. அதை அப்போதே நான் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தேன். அந்தக் கூட்டத்தில் நேரில் பங்கேற்ற நீர்வளத் துறைச் செயலாளர் ஏமாற்றப்பட்டதாக, நீர்வளத் துறை அமைச்சர் அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் அளித் ருந்தார். நேரில் பங்கேற்கும்போதே இந்த நிலை என்றால், ஆன்லைன் மூலம் பங்கேற்கும் போது, தமிழகத்தின் உரிமைக் குரல் முழுமையாக ஒலிக்குமா என்று டெல்டா விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர் என எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார். 

நாளிதழின் செய்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு 

இந்த நிலையில் நாளிதழில் வெளியான செய்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் அனைத்து கூட்டங்களிலும் தமிழ்நாடு அரசு சார்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் நேரிலோ  அல்லது காணொலி காட்சி மூலமாகவோ தொடர்ந்து பங்கேற்று தமிழ்நாட்டின் வாதங்களை வலுவாக முன்வைத்து வருகின்றனர்.  

நேரில் கலந்து கொண்ட அதிகாரிகள் 

டில்லியில் நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டங்களிலும் தொடர்ந்து பங்கேற்று தமிழ்நாட்டிற்கு உரிய நீர் பங்கினை பெறுவதற்கு தேவையான கருத்துகள், தக்க புள்ளி விவரங்களுடன் வலுவாக எடுத்துரைக்கப்பட்டு  வருகிறது.  காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 94வது கூட்டம் புதுச்சேரியில் 21.03.2024 அன்று நடைபெற்றது.  அதில் தமிழ்நாட்டின் அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டனர்.

உண்மைக்கு புறம்பான செய்தி 

இந்நிலையில் உண்மைக்கு புறம்பாக “காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டில்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை“ என்ற செய்தி 16.05.2024 நாளிட்ட பிரபல  நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.  இதுபோன்று தமிழ்நாடு அரசு எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கவில்லை என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

பன்மாநில நதிநீர் பிரச்சனை தொடர்புடைய கூட்டங்களில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நேரில் கலந்து  கொண்டு தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட தகுந்த வாதங்களை எடுத்துரைத்து வருகின்றனர்.  மேலும், அக்கூட்டங்களில் நேரில் கலந்துகொள்ள தமிழ்நாடு அரசு தேவையான அனுமதியை உடனுக்குடன் அளித்து வருகிறது.  இவ்வாறு இருக்கையில் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் திரித்து கூறுவது ஒரு பிரபலமான நாளிதழுக்கு உகந்ததல்ல என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்