சட்டமன்ற தேர்தல் 2026: ’அதிமுக-பாஜக கூட்டணியால் திமுகவை வீழ்த்த முடியுமா?’ புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?
”தொண்டாமுத்தூர் தொகுதியில், 2021இல் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி 1.24 லட்சம் வாக்குகள் பெற்றார். ஆனால், 2024இல் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியின் கீழ் வரும் இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் 58,000 வாக்குகளையே பெற்றார். அதேநேரம் பாஜகவின் வசந்தராஜன் 56,800 வாக்குகளைப் பெற்றார்”

அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி மறுபிறப்பு, தமிழக அரசியலில் கூட்டணிகளின் முக்கியத்துவத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது. ஆளும் திமுக உள்ளிட்ட முக்கிய திராவிடக் கட்சிகளின் வெற்றிக்கு கூட்டணிகள் முக்கியமானவை. 1991 முதல் நடந்த ஏழு சட்டமன்றத் தேர்தல்களில், திமுக மற்றும் அதிமுகவின் ஒட்டுமொத்த வாக்கு விழுக்காடு 66% ஆக இருந்தாலும், இந்த இரு கட்சிகளும் ஒரு கட்சியுடனோ அல்லது பல கட்சிகளுடனோ கூட்டணி அமைத்தே தேர்தல்களை எதிர்கொண்டுள்ளன.
2016: ஒரு விதிவிலக்கு
2016 சட்டமன்றத் தேர்தலில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அதிமுக வேட்பாளர்களை 227 தொகுதிகளில் நிறுத்தி, ஏழு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்கி, அவை அதிமுக சின்னத்தில் போட்டியிட்டன. இந்த துணிச்சலான முடிவு வெற்றி பெற்றது. ஆனால், 2026 தேர்தலில், திமுகவோ, அதிமுகவோ இப்படியொரு ஆபத்தை எடுக்க விரும்பவில்லை. மேலும், 2024 மக்களவைத் தேர்தலில் தேமுதிக, புதிய தமிழகம், மற்றும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI) ஆகியவற்றுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்ட அதிமுக, ஒரு தொகுதியைக் கூட வெல்ல முடியாமல், ஏழு தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்தது. 1972இல் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக முதன்முறையாக இப்படியொரு பின்னடைவை சந்தித்தது.