பொருளாதார ஆய்வறிக்கை: ’ஒரு ட்ரிலியன் டாலருக்கு வாய்ப்பே இல்லை! திமுகவின் பொருளாதார இலக்குகள் தோல்வி!’ விளாசும் ராமதாஸ்!
2030-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர், அதாவது ரூ.88 லட்சம் கோடி என்ற அளவுக்கு உயர்த்தப்போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை பொருளாதார ஆய்வறிக்கை உறுதி செய்திருக்கிறது.

தமிழக அரசின் பொருளாதார ஆய்வறிக்கை என்பது திமுக அரசின் பொருளாதார இலக்குகள் தோல்வி என்பதற்கு ஒப்புதல் வாக்குமூலம் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
2025-2026ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை வெளியிடப்படுகிறது. காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி அடுத்த ஓராண்டுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து விளக்கம் விதமாக மாநில திட்டக் குழு தயாரித்த பொருளாதார ஆய்வறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
ஒப்புதல் வாக்குமூலம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள 2024-25ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை அளிக்கும் வகையில் எதுவும் இல்லை. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த இலக்குகளை திமுக அரசால் எட்டிப்பிடிக்க முடியவில்லை என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம் தான் பொருளாதார ஆய்வறிக்கை ஆகும். எடுத்துக்காட்டாக 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு (GSDP) ரூ.28,32,678.98 கோடியாக இருக்கும் என்று திமுக அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அதில் ஒரு லட்சம் கோடிக்கும் குறைவாக ரூ.27,22, 501.95 என்ற அளவையே தமிழக பொருளாதாரம் எட்டுப்பிடித்திருக்கிறது.
ஒரு ட்ரில்லியன் டாலரை எட்ட முடியாது
2030-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர், அதாவது ரூ.88 லட்சம் கோடி என்ற அளவுக்கு உயர்த்தப்போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை பொருளாதார ஆய்வறிக்கை உறுதி செய்திருக்கிறது. தமிழகத்தின் பொருளாதாரம் தொடர்ச்சியாக ஆண்டுக்கு 12 விழுக்காட்டுக்கும் கூடுதலாக வளர்ச்சியடைந்தால் தான் அது சாத்தியமாகும் . உண்மையில் இந்த இலக்கை அடைய 18 விழுக்காட்டுக்கும் கூடுதலான வளர்ச்சி தேவை. ஆனால், அடுத்து வரும் சில ஆண்டுகளுக்கு தமிழகத்தின் பொருளாதாரம் ஆண்டுக்கு 8 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியடையும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. மக்களுக்கு புரியும் மொழியில் சொல்வதென்றால், 2021-22ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ரூ. 20,71,286 கோடியாக இருந்தது. 2023-24ஆம் ஆண்டில் அது 27.22 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. இரு ஆண்டுகளில் ரூ.6.50 லட்சம் கோடி மட்டுமே பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், அடுத்த 7 ஆண்டுகளில் இன்னும் 50 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்துவது சாத்தியமற்றது.
கஞ்சா ஒழிப்பை கொண்டு வருக
தமிழகத்தில் மிகச்சிறப்பான மனிதவளம் உள்ளது. அதைக் கொண்டு எத்தகைய கடின இலக்கையும் அடைய முடியும். ஆனால், மது, கஞ்சா போதையை கட்டவிழ்த்து விட்டு மனித வளத்தை தமிழக அரசு சிதைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றி மது விலக்கு, கஞ்சா ஒழிப்பை நடைமுறைக்கு கொண்டு வந்து விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு தமிழக அரசு அடித்தளம் அமைக்க வேண்டும்.
