’இந்திய நிலப்பரப்பில் 4%, மக்கள் தொகையில் 6% ஜிடிபியில் 9%’ தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்!
இந்தியாவின் நிலப்பரப்பில் 4%, நாட்டின் மக்கள்தொகையில் 6% மட்டுமே கொண்டிருக்கும் தமிழ்நாடு, 2023-24ஆம் ஆண்டில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 9.21% பங்களித்துள்ளது. 2023-24இல் மாநில உள்நாட்டு உற்பத்தியானது (ஜிஎஸ்டிபி) நடப்பு விலையில் ரூ.27.22 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

2025-2026ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை வெளியிடப்படுகிறது. காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி அடுத்த ஓராண்டுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து விளக்கம் விதமாக மாநில திட்டக் குழு தயாரித்த பொருளாதார ஆய்வறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்:-
2024-25இல், பொருளாதார வளர்ச்சிப் போக்கைப் பாதிக்கும் உலக அளவிலான சவால்களை, தமிழ்நாட்டுப் பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலுடன் எதிர்கொண்டது. பெருந்தொற்றோடு சர்வதேச அரசியல் பதற்றங்களும் தீவிரமான தட்பவெப்ப மாற்றங்களும் உலகளாவிய சந்தை வாய்ப்புகளைப் பாதித்ததுடன் எரிசக்தி, உணவுத் துறை ஆகியவற்றில் நெருக்கடிகளை விளைவித்தன. 2023இல் உலகப் பொருளாதாரம் 3.33% உண்மை வளர்ச்சி நிலையை அடைந்தது. இந்தியப் பொருளாதாரம் 2022-23இல் 7.61%, 2023-24இல் 9.19%, 2024-25இல் 6.48% வளர்ச்சியை எட்டியது. ஒருங்கிணைந்த கொள்கை முடிவுகளின் வலுவான அடித்தளத்தோடு, தமிழ்நாடு குறிப்பிடத்தக்க அளவில் பொருளாதார வளர்ச்சியில் மீண்டெழுந்துள்ளது; 2021-22இலிருந்தே 8% அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து எட்டிவருகிறது. 2024-25இலும் 8% அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மையான வளர்ச்சி விகிதம் 8.33%
தமிழ்நாட்டின் முற்போக்கான சமூகநலக் கொள்கைகளும், வலுவான உள்கட்டமைப்பு வசதிகளும், பெரும் எண்ணிக்கையிலான திறன்மிகு தொழிலாளர்களும் இம்மாநிலத்தை மேம்பட்ட பொருளாதார வளர்ச்சிப்பாதையில் இடம்பெறச் செய்துள்ளனர். இந்தியாவின் நிலப்பரப்பில் 4%, நாட்டின் மக்கள்தொகையில் 6% மட்டுமே கொண்டிருக்கும் தமிழ்நாடு, 2023-24ஆம் ஆண்டில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 9.21% பங்களித்துள்ளது. 2023-24இல் மாநில உள்நாட்டு உற்பத்தியானது (ஜிஎஸ்டிபி) நடப்பு விலையில் ரூ.27.22 லட்சம் கோடியை எட்டியுள்ளது; பெயரளவு வளர்ச்சி விகிதம் 13.71% ஆகவும், உண்மையான வளர்ச்சி விகிதம் 8.33% ஆகவும் உள்ளது.