உதயநிதி ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு! அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைப்பு!
”உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க இருந்த அனைத்து அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன”

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுதால் அவர் பங்கேற்பதாக இருந்த அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கடுமையான காய்ச்சல், தொடர் இருமல் மற்றும் சளி காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவர் அடுத்த சில நாட்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதன் காரணமாக, உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க இருந்த அனைத்து அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
உடல்நலப் பாதிப்பு விவரங்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதங்களின் போது உதயநிதி ஸ்டாலினுக்கு காய்ச்சல் இருந்தபோதிலும், அவர் தனது துறை சார்ந்த விவாதங்களில் தொடர்ந்து பங்கேற்றார். ஆனால், மருத்துவர்களின் கட்டாய அறிவுறுத்தலின்படி, அவரது துறை சார்ந்த மானியக் கோரிக்கை வாசிப்பு நிறுத்தப்பட்டு, பதிலுரை மட்டுமே அவர் அளித்தார். தற்போது, கடுமையான காய்ச்சல், தொடர் இருமல் மற்றும் சளி காரணமாக அவருக்கு முழுமையான ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.