நிதி ஆயோக் கூட்டம்: 'வரியில் 50% தமிழகத்திற்கு தர வேண்டும்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  நிதி ஆயோக் கூட்டம்: 'வரியில் 50% தமிழகத்திற்கு தர வேண்டும்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

நிதி ஆயோக் கூட்டம்: 'வரியில் 50% தமிழகத்திற்கு தர வேண்டும்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Kathiravan V HT Tamil
Published May 24, 2025 04:52 PM IST

‘P.M.ஸ்ரீ’ திட்டத்தில் சில மாநிலங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், S.S.A. நிதி மறுக்கப்பட்டுள்ளது. 2024-2025-ல் தமிழ்நாட்டிற்கு 2200 கோடி ரூபாய் நிதி மறுக்கப்பட்டுள்ளது. இது அரசுப் பள்ளி மற்றும் R.T.E. குழந்தைகளின் கல்வியை பாதிக்கிறது

நிதி ஆயோக் கூட்டம்: 'வரியில் 50% தமிழகத்திற்கு தர வேண்டும்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
நிதி ஆயோக் கூட்டம்: 'வரியில் 50% தமிழகத்திற்கு தர வேண்டும்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

"தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் கூட்டாட்சி உரிமைகளுக்கு வலியுறுத்தல்"

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். "மாண்புமிகு பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், அனைத்து மாநில முதலமைச்சர்கள், நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம்! கடந்த சில நாட்களுக்கு முன்பு எல்லையில் பதற்றமான சூழ்நிலையில், நமது இராணுவ வீரர்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தி, நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்திய தமிழ்நாட்டின் சார்பாக இந்தக் கூட்டத்தில் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி," என்று அவர் தொடங்கினார்.

"திராவிட மாடல்: எல்லோர்க்கும் எல்லாம்"

தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி பேசிய ஸ்டாலின், "சமத்துவம் மற்றும் சமூகநீதி அடிப்படையில், அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த பொருளாதார வளர்ச்சிதான் எங்களது தொலைநோக்கு. ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற குறிக்கோளே திராவிட மாடல்! 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு நிர்ணயித்து செயலாற்றி வருகிறோம். கடந்த ஆண்டு 9.69% வளர்ச்சியுடன், 2047-இல் 4.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இலக்கு வைத்துள்ளோம். இந்தியாவின் 30 டிரில்லியன் டாலர் இலக்கில் எங்களது பங்களிப்பு வலுவாக இருக்கும்," என்று உறுதியளித்தார்.

"தமிழ்நாட்டின் சாதனைகள் மற்றும் திட்டங்கள்"

தமிழ்நாட்டின் சாதனைகளை பட்டியலிட்ட ஸ்டாலின், "தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41% தமிழ்நாட்டில் உள்ளனர். 18 லட்சம் குழந்தைகளுக்கு பயனளிக்கும் காலை உணவுத் திட்டம், ஒரு கோடியே 14 லட்சம் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்’, 694 கோடி இலவச பயணங்களை மேற்கொண்ட ‘விடியல் பயணம்’, பணிபுரியும் மகளிருக்காக ‘தோழி விடுதிகள்’, 40 லட்சம் இளைஞர்களுக்கு ‘நான் முதல்வன்’ திறன் பயிற்சி, ‘புதுமைப்பெண்’, ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டங்கள், 30 புதிய தொழிற்பூங்காக்கள், 16 சிறிய டைடல் பூங்காக்கள் அமைத்து தகவல் புரட்சிக்கு அடித்தளம் அமைத்துள்ளோம்," என்று விவரித்தார்.

"நகர்ப்புற மேம்பாடு மற்றும் நதிகளை தூய்மைப்படுத்த வேண்டும்"

நகர்ப்புற மேம்பாடு மற்றும் நதிகளை தூய்மைப்படுத்துவது குறித்து ஸ்டாலின், "நகர்ப்புறங்களின் மேம்பாட்டிற்கு பெரிய திட்டம் அவசியம். ‘அம்ருத் 2.O’ முடியும் நிலையில், சிறந்த உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட புதிய நகர்ப்புற மறுமலர்ச்சி திட்டம் தேவை. ‘சுத்தமான கங்கை’ திட்டம் வெற்றியைப் பெற்றுள்ளது போல, தமிழ்நாட்டில் காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளை சுத்தம் செய்ய புதிய திட்டம் உருவாக்க வேண்டும். இத்திட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும், மாநிலங்கள் தங்கள் மொழியில் மொழிபெயர்க்க ஏதுவாக இருக்கும்," என்று கோரினார்.

"நிதி மறுப்பு மற்றும் வரி பகிர்வு பாதிப்பு"

நிதி மறுப்பு குறித்து ஸ்டாலின் விமர்சித்தார்: "‘P.M.ஸ்ரீ’ திட்டத்தில் சில மாநிலங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், S.S.A. நிதி மறுக்கப்பட்டுள்ளது. 2024-2025-ல் தமிழ்நாட்டிற்கு 2200 கோடி ரூபாய் நிதி மறுக்கப்பட்டுள்ளது. இது அரசுப் பள்ளி மற்றும் R.T.E. குழந்தைகளின் கல்வியை பாதிக்கிறது. ஒருதலைப்பட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை விடுவிக்க வேண்டும்." மேலும், "15-வது நிதிக்குழு பரிந்துரையின்படி 41% வரி பகிர்வு உயர்த்தப்பட்டாலும், 33.16% மட்டுமே வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசு திட்டங்களுக்கு மாநில அரசு அதிகம் செலவிடுவது பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கு 50% வரி பகிர்வு உயர்த்தப்பட வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

"கூட்டாட்சி மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதி"

நிறைவாக, "சிறப்பான கூட்டத்தை ஏற்பாடு செய்த நிதி ஆயோக்கிற்கு நன்றி! அனைத்து மக்களும் வளமுடன் வாழ, பன்முகத்தன்மை கொண்ட வலிமையான இந்தியாவாக திகழ, தமிழ்நாடு சிறந்த பங்களிப்பை வழங்கும். தற்சார்பு மற்றும் தனித்துவ அடையாளங்களுடன் மாநிலங்கள் வளரும்போதுதான் ஒன்றுபட்ட வலிமையான இந்தியா உலக அரங்கில் உயரும். அதற்கு தமிழ்நாடு எப்போதும் துணை நிற்கும்," என்று உறுதியளித்தார்.