Bus Strike: ‘புஸ் ஆனதா பஸ் ஸ்டிரைக்!’ 100% பேருந்துகள் இயங்குவதாக அரசு அறிவிப்பு!-tamil nadu bus employee strike govt promises 100 bus operations - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Bus Strike: ‘புஸ் ஆனதா பஸ் ஸ்டிரைக்!’ 100% பேருந்துகள் இயங்குவதாக அரசு அறிவிப்பு!

Bus Strike: ‘புஸ் ஆனதா பஸ் ஸ்டிரைக்!’ 100% பேருந்துகள் இயங்குவதாக அரசு அறிவிப்பு!

Kathiravan V HT Tamil
Jan 10, 2024 08:20 AM IST

”Bus Strike: பல்வேறு அரசு போக்குவரத்து கழகங்களில் தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியில் அமர்த்தப்பட்டு அரசுப்பேருந்துகளை அரசு இயக்கத் தொடங்கி உள்ளது”

2வது நாளாக தொடரும் போராட்டம்
2வது நாளாக தொடரும் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து போராடி வரும் நிலையில், திமுகவின் தொமுச, காங்கிரஸின் ஐஎன்டியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்ததில் கலந்து கொள்ளவில்லை. 

வேலை நிறுத்தத்தால் பாதிப்பு இல்லை என்றும், மாநிலம் முழுவதும் 93.90% பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் நேற்றைய தினம் அரசு போக்குவரத்து கழகம் அறிவித்திருந்தது. 

இந்த நிலையில் இரண்டாவது நாளாகவும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டம் தொடரும் நிலையில் காலை 6 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 100 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 2025 பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 10 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 1298 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 399 பேருந்துகளும், கோவை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 1293 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 2099 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 1468 பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 1112 பேருந்துகளும்  என மொத்தம் 9704 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் இது 100.62 சதவீதம் எனவும் அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. 

அரசின் புள்ளிவிவரங்களை மறுக்கும் தொழிற்சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு முழுவதும் ஆளுங்கட்சியின் தொழிற்சங்கத்தினரைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும். ஒவ்வொரு வேலை நிறுத்தத்தின் போதும் கடைபிடிக்கப்படும் பொதுவான உத்தி தான் இது. ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்குகிறார்கள் என்பதாலேயே வேலை நிறுத்தம் தோல்வியடைந்து விட்டதாகவோ, அரசு வெற்றி பெற்று விட்டதாகவோ கருத முடியாது. ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினருக்கும் ஓய்வு தேவை என்பதால் நேரம் செல்ல செல்ல இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறையும் என தெரிவித்துள்ளனர். 

பல்வேறு அரசு போக்குவரத்து கழகங்களில் தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியில் அமர்த்தப்பட்டு அரசுப்பேருந்துகளை அரசு இயக்கத் தொடங்கி உள்ளது. 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.