BJP President Election: பாஜக தலைவர் பதவிக்கு நாளை முதல் மனுத்தாக்கல்! அண்ணாமலை, நயினாருக்கு செக்! புதிய தலைவர் யார்?
பாஜக தலைவர் பதவியில் போட்டியிட 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று விதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிட முடியாத சூழல் உருவாகி உள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் நாளை விருப்பமனு அளிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10 ஆண்டுகள் பாஜக உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைமை தேர்தல் அதிகாரி எம்.சக்ரவர்த்தி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு
அவர் தனது அறிவிப்பில், நமது கட்சியின் அமைப்பு பருவ தேர்தல் திருவிழாவின் இறுதிக் கட்டத்தை நாம் அடைந்துள்ளோம் என்று குறிப்பிட்டார். கிளை முதல் மாவட்டத் தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரையிலான தேர்தல்கள் முடிந்துவிட்டன. தற்போது மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்பமனுக்களை வரவேற்கிறோம் என்று தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
பாஜக தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனுக்களை கட்சியின் இணையதளமான www.bjptn.com -இருந்து பதிவிறக்கம் செய்யலாம். ஏப்ரல் 11, 2025 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை, போட்டியிட விரும்புபவர்கள் தங்கள் விருப்பமனுக்களை மாநில தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
