“பிரதமர் வரக்கூடிய அளவுக்கு தமிழகத்தில் பெரிய வேலை இல்லை, அமித்ஷாவே பார்த்துக்கொள்வார்” நயினார் நாகேந்திரன்
”ஆயுஷ்மான் பாரத் திட்டமாக இருந்தாலும், வீடு கட்டுவதற்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியை மாநில அரசு வெறும் ஸ்டிக்கர் ஒட்டி தனது சாதனையாகக் காட்டுகிறது”

“பிரதமர் வரக்கூடிய அளவுக்கு தமிழகத்தில் பெரிய வேலை இல்லை, அமித்ஷாவே பார்த்துக்கொள்வார்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி நெல்லையில் நடந்த யோகா நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி வலிமை உடன் உள்ளதாகவும், மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்த கேள்விக்கு, “பிரதமருக்கு நிறைய வேலை இருக்கிறது, ஆனால் தமிழகத்தில் பெரிய வேலை இல்லை, அமித்ஷாவே பார்த்துக்கொள்வார்,” என்று கிண்டலாக பதிலளித்தார்.
மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசு “ஸ்டிக்கர்” ஒட்டுகிறது
நயினார் நாகேந்திரன், மத்திய அரசு வழங்கும் திட்டங்களை தமிழக அரசு தனது பெயரில் செயல்படுத்துவதாக விமர்சித்தார். “ஆயுஷ்மான் பாரத் திட்டமாக இருந்தாலும், வீடு கட்டுவதற்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியை மாநில அரசு வெறும் ஸ்டிக்கர் ஒட்டி தனது சாதனையாகக் காட்டுகிறது. தமிழை வைத்து அரசியல் செய்வதைத் தவிர திமுகவுக்கு வேறு வேலை தெரியாது,” என்று குற்றம்சாட்டினார்.