‘அமித்ஷா உடன் சந்திப்பு.. டெல்லி பறக்கும் அண்ணாமலை..’ இபிஎஸ் நிபந்தனை குறித்து ஆலோசனை?
எடப்பாடி பழனிசாமி வைத்த நிபந்தனைகளின் அடிப்படையில், அண்ணாமலையுடன் ஆலோசனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 25 ம் தேதி அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நிலையில், மார்ச் 27 ம் தேதியான நாளை, அமித்ஷாவை சந்திக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 25 ம் தேதி திடீரென டெல்லி சென்ற, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அன்று இரவு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அவருடைய இல்லத்தில் சந்தித்தார். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த அந்த சந்திப்பில், மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எடப்பாடி முன் வைத்த கோரிக்கைகள்
2026 சட்டமன்ற தேர்தலில் என்டிஏ கூட்டணியில் அதிமுக இணைவது குறித்த அந்த பேச்சு வார்த்தையில், தனக்கு நெருடலான சில விசயங்களை எடப்பாடி பழனிசாமி பகிர்ந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழக பாஜக தலைமை மாற்றம், டிடிவி, ஓபிஎஸ் இணைப்பு மறுப்பு போன்றவை இடம் பெற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, பரிசீலிப்பதாக அமித்ஷா தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி உடனான, அமித்ஷாவின் இந்த சந்திப்பு, தமிழக பாஜக மற்றும் அதிமுகவினருக்கு இறுதி கட்டத்தில் தான் தெரியவந்துள்ளது. அந்த அளவிற்கு இந்த விவகாரம் ரகசியம் காக்கப்பட்டது. கூட்டணி தொடர்பாக, தமிழக பாஜகவினர் உடன் பேசப்போவதில்லை என்கிற எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாட்டின் எதிரொலியாக தான், நேரடியாக எடப்பாடியை அமித்ஷா சந்தித்தார்.
அண்ணாமலை உடன் என்ன ஆலோசனை?
அவர்களுக்குள் நடந்த பரஸ்பர நிபந்தனைகள் குறித்து ஆலோசிக்கவே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று அல்லது, நாளை காலையில் விமானம் மூலம் டெல்லிக்கு அண்ணாமலை புறப்படுவார் என்று தெரிகிறது.
அமித்ஷா உடனான சந்திப்புக்கு பிறகு, பாஜக- அதிமுக கூட்டணி, முழு வடிவம் பெறும் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு, பாஜக தலைமையின் நிலைப்பாடு என்ன என்பதும் தெரிந்துவிடும். இருப்பினும் அண்ணாமலை பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
