‘நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு..’ கச்சத்தீவு விவகாரத்தில் ஆதாரத்துடன் திமுகவை விளாசிய அண்ணாமலை!
இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தந்தை மறைந்த கருணாநிதி அவர்கள், கடந்த 1974 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்தபோது, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுடன் சேர்ந்து, கச்சத்தீவு மீதான உரிமையை விட்டுக் கொடுத்ததுதான், இன்றைய பிரச்னைகளுக்கு காரணம்.

திமுக அரசின் கச்சத்தீவு தொடர்பான தீர்மானம் குறித்து, பாஜக தலைவர் அண்ணாமலை, சில ஆதாரங்களுடன் கண்டனம் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக, தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவு இதோ:
நாளொரு மோடை பொழுதொரு நடிப்பு
‘‘சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, குழந்தைகள், பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள், அதிகரித்து வரும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறைகள் என, தமிழகம் இதுவரை இல்லாத மோசமான இருண்ட காலத்தில் இருக்கும்போது, நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அவரது இன்றைய நாடகம், கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்.
கடந்த இருபது ஆண்டுகளில், இலங்கை அரசால், ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து பல துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்குக் காரணம், இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தந்தை மறைந்த கருணாநிதி அவர்கள், கடந்த 1974 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்தபோது, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுடன் சேர்ந்து, கச்சத்தீவு மீதான உரிமையை விட்டுக் கொடுத்ததுதான்.
