BJP VS DMK: டாவோஸில் முட்டையிட்டதா திராவிட மாடல்? டிஆர்.பி.ராஜாவுக்கு பாஜக சரமாரி கேள்வி!
உத்திரப்பிரதேசம் குழு ரூ.19,400 கோடி முதலீடுகளையும் மஹாராஷ்டிரா குழு ரூ.15.70 லட்சம் கோடிக்கான முதலீடுகளையும், தெலுங்கானா ரூ.1.79 லட்சம் கோடிகளை ஈர்த்திருக்கும் நிலையில், தமிழகம் ஈர்த்துள்ள முதலீடுகளை வெளியிடாமல் வெட்டி பெருமை பேசுவது ஏன்?

டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த முதலீடும் வரவில்லை என்று தமிழ்நாடு பாஜக குற்றம்சாட்டி உள்ளது.
முதலீடுகளை வெளியிடாமல் வெட்டி பெருமை பேசுவது ஏன்?
இது தொடர்பாக தமிழ்நாடு பாஜகவின் ‘எக்ஸ்’ தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், தொழில்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜாஅவர்களே ! டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் உத்திரப்பிரதேசம் குழு ரூ.19,400 கோடி முதலீடுகளையும் மஹாராஷ்டிரா குழு ரூ.15.70 லட்சம் கோடிக்கான முதலீடுகளையும், தெலுங்கானா ரூ.1.79 லட்சம் கோடிகளை ஈர்த்திருக்கும் நிலையில், தமிழகம் ஈர்த்துள்ள முதலீடுகளை வெளியிடாமல் வெட்டி பெருமை பேசுவது ஏன்?
எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன?
முதல்வர் திரு மு.க.ஸ்டாலின், அவர்கள் ஆட்சிக்கு வந்தபின், கடந்த 2022ஆம் ஆண்டு துபாய் ரூ.6100 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், 2023 ஆம் ஆண்டு ஜப்பானில் ரூ.946.90 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், 2024 ஆம் ஆண்டு ஸ்பெயினில் ரூ.7442 கோடி முதலீடுகளும் பெறப்பட்டதாய் கூறப்பட்ட நிலையில், அவற்றில் எத்தனை செயல்பாட்டிற்கு வந்துள்ளன, எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன?