Tamil Nadu Assembly Session : ‘பாஜக வழியில் திமுக..’ நேரடியாக விமர்சித்த காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர்!
சட்டமன்றத்தில், காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற குழுத் தலைவருமான செல்வப் பெருந்தகை திமுக அரசை புகழ்ந்தும், பாராட்டியும் பேசியிருந்த நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த எம்.பி., தமிழக சட்டமன்ற கூட்டத்தை விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக சபாநாயகர் ஓம் பிர்லா வழியில், தமிழக சட்டமன்றம் நடைபெறுகிறதா என்று மாணிக்கம் தாகூர் எம்.பி., தன்னுடைய எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில், கவன ஈர்ப்புத் தீர்மானம் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. வழக்கமாக கேள்வி நேரம் முழுவதும் முழு நேரலை செய்யப்படும். ஆனால், இந்த முறை சட்டமன்றம் தொடங்கியதிலிருந்தே, நேரலையில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகிறது. குறிப்பாக, முதல் நாள் ஆளுநர் உரையின் போதே, காலையில் இருந்து ஊடகங்களுக்கான நேரலை லிங் மற்றும் அவுட் புட் வழங்கப்படவில்லை.
நேரலை மறுப்பும்.. விமர்சனமும்
ஆளுநர் வெளிநடப்பு, அதன் பின் எதிர்கட்சிகள் வாக்குவாதம் அனைத்தும் முடிந்து, அவர்கள் வெளிநடப்பு செய்த பின், ஆளுநர் உரையை சபாநாயகர் வாசித்தார். அப்போது மட்டுமே நேரலை வழங்கப்பட்டது. இது இதுவரை இல்லாத ஒரு நடைமுறையாக இருந்ததால், அனைத்து தரப்பினரும் அதை விமர்சித்தனர்.
இந்நிலையில், இன்று நடந்த கேள்வி நேரத்தில், நேரலையில் பெரும் குளறுபடி நடந்தது. குறிப்பாக, எதிர்கட்சிகள் பேசிய எதுவும் வீடியோவாக காட்டப்படவில்லை. மாறாக, எதிர்கட்சிகள் பேசும் போதும், சபாநாயகர் முகம் மற்றும் திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முகத்தை மட்டுமே காட்டினர். இதுதொடர்பான விவாதமும் , கண்டனமும் இன்று எழுந்த நிலையில், அது தொடர்பான செய்தியை, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சட்டமன்ற செய்திக்கான ஊடகவியலாளர் ஸ்டாலின், தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில்,
‘கருப்பு சட்டை, யார் அந்த சார் ? பேட்ஜ்
டங்ஸ்டன் தடுப்போம் முக கவசம்
அணிந்து அதிமுக உறுப்பினர்கள் அவையில் பங்கேற்றுள்ள நிலையில், கேள்வி நேரத்தில் அதிமுக உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பும் போதும் பதில் அளித்து பேசும் போதும் அவர்களின் காட்சிகள் காட்டப்படவில்லை.
வழக்கமாக கேள்வி நேரம் முழுமையாக நேரலை செய்யப்படும் நிலையில், அதிமுக உறுப்பினர்களின் காட்சிகள் காட்டப்படவில்லை’
என்று அதில் பதிவு செய்திருந்தார். அந்த பதிவுக்கு திமுக.,வினர் சிலர் எதிர்வினையாற்றி வந்த நிலையில், அவருடைய அந்த பதிவை ரீட்விட் செய்த விருதுநகர் காங்கிரஸ் எம்.பி.,யும், அந்த கட்சியின் முக்கிய நிர்வாகியுமான மாணிக்கம் தாகூர், கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவருடைய அந்த ட்விட்டில்,
‘இது சரியா?
மாண்புமிகு ஒம்பிர்லா அவர்களின் வழியில்’
என்று ஆச்சரிய எமோஜியுடன் குறிப்பிட்டுள்ளார் மாணிக்கம் தாகூர். பாஜக சபாநயாகர் ஓம்பிர்லா வழியில், தமிழக சட்டமன்றம் நடைபெறுகிறதா என்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியிருக்கிறது. சட்டமன்றத்தில், காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற குழுத் தலைவருமான செல்வப் பெருந்தகை திமுக அரசை புகழ்ந்தும், பாராட்டியும் பேசியிருந்த நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த எம்.பி., தமிழக சட்டமன்ற கூட்டத்தை விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.