போதை பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை!
”மருத்துவப் பரிசோதனையில் கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அதன் அடிப்படையில் காவல்துறையிரின் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என கூறப்படுகிறது”

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவிடம் 16 மணி நேரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம் காவல்துறையினர் 16 மணி நேரமாக தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னதாக நடிகர் ஸ்ரீகாந்த் இதே வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள நிலையில், கிருஷ்ணாவிடம் நடைபெறும் விசாரணை கவனம் பெற்றுள்ளது.
சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில், நேற்று மதியம் ஒரு மணி முதல் தொடங்கிய இந்த விசாரணையில், மூன்று முக்கிய அம்சங்கள் குறித்து காவல்துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர். முதலாவதாக, கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தினாரா? என்பது குறித்து ஆராயப்படுகிறது. இரண்டாவதாக, அவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டாரா அல்லது போதை பொருள் விற்பனை செய்பவர்கள் உடன் தொடர்பில் இருந்தாரா என்பது விசாரிக்கப்படுகிறது. மூன்றாவதாக, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களுடன் பணப் பரிவர்த்தனைகளில் ஏதேனும் அவருக்கு பங்கு உள்ளதா என்பதும் ஆய்வு செய்யப்படுகிறது.