‘4 ஆண்டுகளில் 12 லட்சம் புகார்கள்..’ மின்னணு வர்த்தக நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்ட சு.வெங்கடேசன் எம்.பி!
‘இந்த நான்கு ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் புகார்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வந்துள்ளதே தவிர குறைந்தபாடில்லை. 2020 -21 இல் 2,05,000 புகார்கள் எனில் 2023 - 24 இல் 4,45,000 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. பிலிப் கார்ட் நிறுவனத்திற்கு எதிரான புகார்கள் மட்டும் நான்கு ஆண்டுகளில் 4,34,000 ஆகும்’
நுகர்வோர்களை அலறவிடும் மின்னணு வர்த்தக நிறுவனங்களால், நான்கு ஆண்டுகளில் 12 லட்சம் புகார்கள் வந்துள்ளதாக மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்பி கேள்விக்கு, மத்திய அமைச்சர் அளித்த பதிலில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புகார்களும் நிறுவனங்களும்
‘‘நாடாளுமன்றத்தில் நுகர்வோர் நல அமைச்சகத்திடம் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் மீது எத்தனை புகார்கள் வந்துள்ளன, அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி (எண் 3815/18.12.2024) எழுப்பி இருந்தேன். அதற்கு பதில் அளித்த நுகர்வோர் நலன் இணை அமைச்சர் பி.எல்.வர்மா 2021 - 2024 நிதியாண்டுகளில் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் மீது 12,92,728 புகார்கள் வந்துள்ளன என்று பதில் அளித்துள்ளார்.
இந்த நான்கு ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் புகார்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வந்துள்ளதே தவிர குறைந்தபாடில்லை. 2020 -21 இல் 2,05,000 புகார்கள் எனில் 2023 - 24 இல் 4,45,000 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. பிலிப் கார்ட் நிறுவனத்திற்கு எதிரான புகார்கள் மட்டும் நான்கு ஆண்டுகளில் 4,34,000 ஆகும். அமேசான் நிறுவனத்திற்கு எதிரான புகார்கள் 1,55,000.
நுகர்வோர் நலன் பாதுகாப்பதற்கு இந்த புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு நேரடியான எந்த பதிலும் இல்லை. சட்டம் என்ன சொல்கிறது, எப்படி புகார்களை பதிவு செய்கிறோம் என்று மட்டும் அமைச்சர்கள் விளக்கம் கூறியுள்ளார். நீண்ட விளக்கத்தில் நுகர்வோர்களை தவிக்க விடும் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரங்கள் ஏதுமில்லை. இப்படி நிலைமை இருந்தால் ஆண்டுக்காண்டு புகார்கள் அதிகரிக்கத்தானே செய்யும்,’’
என்று சு. வெங்கடேசன் எம்.பி தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.