'தென்பெண்ணை தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்?' மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி
“இன்னும் தென்பெண்ணை ஆற்று தீர்ப்பாயம் அமைக்காதது குறித்து கோபமடைந்த நீதிபதிகள், கடந்த முறையே இந்த விவகாரம் குறித்து திட்டவட்டமாக கூறி இருந்தோம். ஆனால் ஏன் இதுவரை தீர்ப்பாயம் அமைக்கவில்லை என கேள்வி எழுப்பினர்”
தென்பெண்ணை ஆற்றுக்கு தீர்ப்பாயம் அமைக்கதது ஏன் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கர்நாடகா - தமிழ்நாடு இடையே காவிரி விவகாரத்தை போலவே தென்பெண்ணை ஆற்று விவகாரமும் நீண்டநாள் தீராத பிரச்னையாகவே இருந்து வருகிறது. ஏற்கெனவே தென்பெண்ணை ஆற்று விவகாரத்தில் தீர்பாயம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தீர்ப்பாயம் அமைக்க கடந்த மூன்று முறைக்கு மேல் மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது நிச்சயமாக அடுத்த முறை தீர்ப்பாயம் அமைத்துவிடுவோம் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஹிரிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இன்னும் தென்பெண்ணை ஆற்று தீர்ப்பாயம் அமைக்காதது குறித்து கோபமடைந்த நீதிபதிகள், கடந்த முறையே இந்த விவகாரம் குறித்து திட்டவட்டமாக கூறி இருந்தோம். ஆனால் ஏன் இதுவரை தீர்ப்பாயம் அமைக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.
கர்நாடகாவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய அரசிடம் நிலைப்பாட்டை கேட்டுள்ளோம் என்ற தகவல் சொல்லப்பட்டது.
புதிய அரசு, பழைய அரசு என்பதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை, தீர்ப்பாயம் அமைக்க வேண்டியது உங்கள் வேலை அதை ஏன் செய்யவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இன்னும் இரண்டு தினங்களில் கர்நாடக அரசின் நிலைப்பாடு எங்களுக்கு தெரியவந்துவிடும் என்பதால் அதற்கு பிறகு எங்கள் நிலைப்பாட்டை கூறுகிறோம் என கூறி மத்திய அரசு கால அவகாசம் கேட்ட நிலையில் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்துள்ளனர்.