’அப்பாடா! ஓபிஎஸ்க்கு ஆறுதல் தந்த உச்சநீதிமன்றம்!’ சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க தடை!
முன்னதாக கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை மீண்டும் விசாரணை செய்ய உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உள்ளது.
வழக்கின் பின்னணி
2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை அன்றைய அதிமுக அரசில் வருவாய்த்துறை அமைச்சராகவும், சில காலம் முதலமைச்சராகவும் ஓ.பன்னீர் செல்வம் பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் தனது வருமானத்தை மீறி அளவுக்கு அதிகமாக 1.77 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத், ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு மதுரையிலும் பின்னர் சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது.
கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், ஓ.பன்னீர் செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவினை ஏற்ற நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுதலை செய்து 2012ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை மீண்டும் விசாரணை செய்ய உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த நிலையில் தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணை செய்யும் உத்தரவுக்கு இடைக்கால தடை வழங்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை மறு விசாரணை செய்ய இடைக்கால தடை விதித்ததுடன், சிறப்பு நீதிமன்றத்தின் அதிகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் எடுத்துக் கொண்டு குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய உத்தரவிட்டு உள்ளது. ஆனால் ஓபிஎஸ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் முடிவை சிறப்பு நீதிமன்றமே எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
டாபிக்ஸ்