Sanatana Dharma: சனாதன சர்ச்சை! உதயநிதிக்கு எதிரான வழக்குகள் புஸ்….! உச்சநீதிமன்றம் தந்த திடீர் ட்விஸ்ட்!
சனாதன பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட மனுக்களை திரும்ப பெறுவதாக மனுதாரர்கள் தெரிவித்ததை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சனாதன தர்மம் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்களுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.
உதயநிதி பேச்சால் வெடித்த சர்ச்சை
கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது “இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதைஎல்லாம் நாம் எதிர்க்க கூடாது ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்பது சமத்துவத்திற்கு சமூகநீதிக்கும் எதிரானது” என கூறி இருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் கலந்து கொண்டிருந்தார். மேலும் திமுக எம்.பியான ஆ.ராசாவும் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசி இருந்தார்.